Thursday, August 7, 2014

வேலையில்லா பட்டதாரி ஜிகர்தண்டாவுடன் ஆடும் சதுரங்க வேட்டை

இந்த முறை, நிஜமாகவே சுட சுட விமர்சனம், இல்ல இல்ல என்னுடைய கருத்துக்கள்தான். தங்கமணி வேறு ஊரில் இல்லை. வந்த இரண்டு படங்களும் சரி, ஏற்கனவே வந்த இரண்டு படங்களும் சரி, எல்லாமே நன்றாக உள்ளது என்று சொல்லும் போது எப்படி பார்க்காமல் இருக்க முடியும்?

அது மட்டும் இல்லாமல் வேளச்சேரியில் இருப்பதால் உள்ள வசதி என்னவென்றால், நடந்து போய், பீனிக்ஸ் மாலில் படம் பார்க்கலாம். அப்படி இல்லையா, 'விடுறா S2க்கு' என போகலாம். அப்படியும் இல்லையா, 'துணையிருப்பாள் ராஜலக்ஷ்மி'.

ஜிகர்தண்டா:


ஞாயிறு மாலை ஆறு மணியளவில், திடீரென மின்சாரம் தடை, ஆனால், சம்சாரம் தடை இல்லை. வீட்டில் உட்கார்ந்து என்ன செய்ய? உடனே கிளம்பி ராஜலக்ஷ்மி வந்து "பாத்துட்டோம்ல, நாங்கள்லாம் யாரு?".

ஒரு இளம் இயக்குனர் ரவுடிகள் பற்றி படம் எடுக்க, மதுரைக்கு வந்து ஒரு ரவுடியை தொடர முயற்சிக்க, ஒரு கட்டத்தில் அவனிடம் மாட்டிக்கொள்ள, என் கதையில் நானே நடிக்கிறேன் என்று ரவுடி சொல்ல, அதன் பின் நடக்கும் சம்பவங்களே இந்த படம்.

உண்மையில் இந்தப் படம் எனக்கு பிடித்ததா இல்லையா என்றே சொல்லத் தெரியவில்லை. உண்மையிலேயே ஒளிப்பதிவும், இசையும் ஆங்கிலப்படங்களுக்கு இணையாகவே இருந்தன. ஆனால், எனக்குத்தான் என்னவோ போலிருந்தது. (சன் டிவியில் வரும் மஹாபாரதம் ஏன் நமக்கு பிடிக்கவில்லை, நாம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போல உள்ளவர்கள் அதில் நடிப்பதால். அதுவே விஜய் டிவியில் வரும் டப்பிங் நன்றாக இருப்பது போல தோன்றும். இதுவும் அது போலத்தான் இருந்தது.) படத்தின் முற்பாதியில் அதிரடியாக பாயும் கதை, இரண்டாம் பாதியில் அப்படியே காமெடியாக (வடிவேலுக்கு வரும் அறிமுக காட்சி போல) மாறிவிட்டது.

துரோகம் செய்யும் அடியாளைக் கண்டு பிடிக்க திட்டங்களை சொல்லி, கையும் களவுமாகப் பிடிப்பது நன்றாக இருந்தாலும், காமிரா முன் உட்கார்ந்து தாங்கள் செய்த கொலைகளை விலாவாரியாக சொல்வது என்ன லாஜிக்கோ? வசூல் ராஜா படத்தில், பிரபு கமலிடம் சொல்லுவார் "நீ பாட்டுக்கு இங்க வந்துட்ட, அதனால, உன்ன டொக்கு ஆயிட்டன்னு சொல்றாங்க' என்பார். உடனே, கமல் கோவமாக "அப்டியா, யாரு" என்று கேட்டு விட்டு "சரி, நாம படிக்க வந்துட்டோம், படிக்கிற வேலயைப் பாப்போம்" என்பார். அதுதான் இரண்டாம் பாதியில் நினைவுக்கு வந்தது.

கண்டிப்பாக, வித்தியாசமான படம், (கொஞ்சம் கூட பிட்சா படம் நினைவுக்கு வந்து விடக்கூடாது என்று மெனக்கெட்டுள்ளார்.) அதனாலேயே அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. முதல் பாதியில், அளவோடு வரும் நகைச்சுவை, இரண்டாம் பாதியில் மிஞ்சியது போல தோன்றியது. அதிலும் குறிப்பாக இறுதிக்காட்சிகள். (சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும்.)

இந்தப் படத்தில் காதல் என்ற ஒன்று தேவையே இல்லை. அப்படி ஒன்றும் உண்மைக் காதலாகவும் அது இல்லை. அதை நீக்கி விட்டு, நீளத்தை குறைக்கலாம். மற்றபடி பல காட்சிகள் அட்டகாசம். ஒரே ஷாட்டில் வரும், தியேட்டரில் நடக்கும் கொலை முயற்சி, அடியாளின் துரோகத்தைக் கண்டுபிடிப்பது, நடிக்க முயற்சி செய்யும் காட்சிகள், இன்னும் பல.

ராஜலக்ஷ்மியில் கொடுத்த 80 ரூவாய்க்கு, இதுக்கு மேல நான் கூவக் கூடாது.

சதுரங்க வேட்டை:

வாயையும் மூளையும் மட்டும் மூலதனமாக வைத்து, மற்றவர்களின் ஆசையை பணமாக மாற்றி வாழும் ஆள், திருந்தி வாழ நினைக்கும்போது முன் செய்த பாவங்கள் தொடர்ந்து வர, என்ன ஆயிற்று என்பதே கதை.

மைசூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள், போன் பேசிக்கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தேன். திடீரென ஒரு 40 வயதுள்ள ஒரு ஆள் வந்து "ஸார், நீங்க தமிழா, தயவு செஞ்சு உதவி பண்ணுங்க ஸார், ஊர்ல இருந்து இங்க சொந்தக்காரன் ஒருத்தன பாக்கவந்தேன், எல்லாத்தையும் திருடிட்டாங்க, போன் நம்பரும் ஞாபகம் இல்ல, 100 ரூபா கொடுத்தா நான் ஏன் சொந்த ஊருக்கே திரும்பி போயிடுவேன் ஸார், உங்க போன் நம்பர் மட்டும் கொடுங்க. போய் போன் பண்ணி, உங்க அட்ரஸ் வாங்கி காச அனுப்பறேன்" என்றான்.

நான் புத்திசாலித்தனமாக "நானே வந்து டிக்கட் எடுத்து தரேன், வாங்க" என்றேன். அவனும் "சாமி, சாமி, கோடி புண்ணியம் வாங்க" என்றான். நான் சற்றே குழம்பி, "சரி, இந்தாங்க பணம், என் போன் நம்பர். இங்கிருந்து டவுன் பஸ் புடிச்சு, சிட்டி பஸ் ஸ்டாண்ட் போய், உங்க ஊர் போங்க" என்று அனுப்பினேன். 9 வருடங்கள் ஆகி விட்டது, இன்னும் போன் வரவில்லை. இது பரிதாபத்தில் நான் ஏமாந்த கதை. ஆனால், படத்தில் இது போல காட்சிகள் இல்லை. ஆனால் ஒரு வசனம் உண்டு. "கருணை காட்டுறது முக்கியம் இல்லை, ஆனா, அந்த கருணையை எப்படி காசாக்குறதுன்னு யோசி"

சென்னையில் ஒரு நாள், திடீரென ஒரு நண்பன் அழைத்தான். "டேய், நல்லா இருக்கியா, உன்ன பாக்கனும்போல இருக்கு, திருவான்மியூர் வாயேன். ஜெயந்தி தியேட்டர் கிட்ட நில்லு, நானே உன்ன வந்து கூட்டிப் போறேன்" என்றான். நானும்,எங்களுக்கு பொதுவான இன்னொரு நண்பனுடன் வந்து நின்றேன். இருவருமே பயங்கரமாக யோசித்தோம். "இம்புட்டு பாசத்தோட கூப்பிடுறான்? என்னவா இருக்கும்?". வந்து ஒரு சந்துக்குள் உள்ள பெரிய வீட்டுக்கு கூட்டிப் போனான். "ஒண்ணுமில்ல, ஒரு சின்ன டிஸ்கஸன்" என்றான்.

திடீரென, ஒரு டிப் டாப் வாலிபர் வந்து, ஒண்ணுக்கு ரெண்டுக்கு என்று ஆத்தோ ஆத்தென்று ஆத்தி விட்டு "நான் என்னோட சாஃப்ட்வேர் வேலய, விட்டுட்டு, இதுக்காக ஆள் பிடிச்சு, ஹோண்டா சிட்டி கார வாங்கியிருக்கேன். நீங்களும் சேருங்க" என்றான். இது என் நண்பன் ஆசையில் ஏமாந்த கதை. இதுதான் படந்தின் முக்கிய அம்சம். அடுத்தவன் பேராசையைத் தூண்டி பணம் பறிப்பது. அதற்கான வசனம் "நான் யாரையும் போய் ஏமாத்துல. ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்" அதன் பின் நாங்கள் என் நண்பனிடம் பேசியது எல்லாம் சென்சாரில் கட் ஆகிவிடும். அந்த டிப் டாப் வாலிபரின் பேச்சு அப்படியே அச்சு அசலாக இந்தப் படத்தில் வந்தது. என்ன, கார்தான் ஹோண்டா சிட்டியில் இருந்து BMW ஆக மாறி விட்டது.

நாம் பல முறை வாழ்க்கையில் ஏமாற்றப்படுகிறோம் என்பதையே உணர்வதில்லை. அப்படியே தெரிந்தாலும், அதை அப்படியே துடைத்து விட்டு அடுத்த முறை ஏமாற தயாராகிறோம். கேட்டால் "எல்லோரையும் ஒரே மாதிரி நெனக்கலாமா" என்கிறோம். படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, நகைக்கடை காட்சிதான், அதன் பின் MLM மற்ற அனைத்திலும் அவர்கள் குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே ஏமாறுகின்றனர். (சரி ஈமு மேட்டர் ஓகே).

அதிலும் குறிப்பாக எங்கெங்கு மக்கள் ஏமாந்தனரோ, அதே இடங்களைத் தேர்வு செய்தது அருமை. இந்தப் படத்தில் எனக்குப் பிடிக்காத காட்சிகள் என்றால், அந்த பிளாஷ்பேக் மற்றும் திருந்தி வாழும் காட்சிகள். நம் மக்களுக்கு அதுதான் தேவை என்பதால் வைத்து விட்டார்கள் போல. முடிந்தால் இதே போல வேறு வேறு ஏமாற்று வேலைகளை வைத்து இன்னும் நான்கைந்து பாகங்கள் கூட எடுக்கலாம். ஆனால் ஒன்று, இதைப்போல ஆயிரம் படங்கள் வந்தாலும் நம் மக்கள் திருந்த மாட்டார்கள் (நான் உட்பட).

வேலையில்லாப் பட்டதாரி:

தனுஷோட பொல்லாதவன், படிக்காதவன் ரெண்டோட கதைய லேசா எடுங்க. மிஸ்டர் பாரத் படத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் போட்டு கலக்குங்க. கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட், அப்புறம் முந்திரிப் பருப்பு தூவற மாதிரி காமெடி வசனம். எல்லாத்தையும் நல்லா கலந்தா, சுட சுட VIP தயார். படத்துல எதுவுமே கூட குறைய இல்ல. சரியான கலவை.

ன் சகலைய நக்கல் பண்ண எடுத்திருந்தாலும், நல்லாவே அதை பண்ணியிருக்காங்க. (ஏன் இதை அடிச்சு சொல்றேன்னா, கடைசியா வர்ற மன்னிப்பு சீன வச்சித்தான்). ஆனாலும் இந்தப் படம் எனக்கு கொஞ்சம் அதிகமாவே பிடிச்சிது. அதுக்குக் காரணம் தனி பதிவாவே வரும்.

சரபம்:

படம் பார்க்க வேண்டும் என்று முயற்சித்தேன். சற்றே அலைச்சல் அதிகமாக இருந்ததால், பார்க்கவில்லை. நன்றாக உள்ளது என்று கேள்வி. நன்றாக இருந்தால், இன்னொரு பதிவு போட வேண்டியதுதான். பார்த்த இன்னொரு நல்ல படத்தை விமர்சிக்கிறேன்.

பூவரசம் பீப்பீ:

துப்பாக்கி படத்தோட அட்டக் காப்பி. அதுல விஜய் லீவுல நாட்டக் காப்பாத்துறாரு. இது பட்ஜெட் கம்மிங்கறதால, சின்னப் பசங்க, குட்டி ஊர காப்பாத்துறதா மாத்திட்டாங்க.

அருமையான இயக்கம். நிறைய காட்சிகள் மிகை என்று தோன்றினாலும், இந்த காலத்தில் கண்டிப்பாக நடக்கலாம். என்ன, இது போல அதிக பிரசங்கித்தனமாக ஒரு 10 பேர் இருந்தால், படம் பார்த்து விட்டு, இன்னும் 10 பேர் அதே போல நடக்க முயற்சி செய்வார்கள். அதுதான் பிரச்சினை. எனவே, காதல் (போன்ற) காட்சிகளை குறைத்திருக்கலாம். மற்றபடி தரமான படம். அதனால்தான் வெற்றி பெறவில்லை போல. 

பதிவின் தலைப்பிற்காக யாரும் தனியாக பின்னூட்டத்தில் பாராட்ட வேண்டாம். எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.

3 comments:

  1. சிறந்த திறனாய்வுப் பகிர்வு
    தொடருங்கள்

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    ReplyDelete
  2. Heard 'Sharabam' is the copy of Japanese movie 'Game'. FYI.

    ReplyDelete
  3. \\பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!\\

    நமக்கு அதெல்லாம் தெரியாதுங்க. பாபுவை நையப் புடைக்கும் ஆற்றல் வேண்டுமானால் உள்ளது.

    And, thanks for the info anony. I also read the same.

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..