Sunday, February 3, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

அனைவருக்கும் வணக்கம். தீபாவளி வந்ததே தெரியவில்லை. அதற்குள் பொங்கலே முடிந்து விட்டது. முன்பு ஒரு முறை வேலை பற்றி சொன்னேன் அல்லவா. இப்போது மீண்டும் பழைய நிறுவனத்திற்கே வந்து விட்டேன், நான் வந்த நேரமோ என்னவோ தெரியவில்லை. ஒரு மொக்கை வேலையில் மாட்டி கிட்டத்தட்ட ஒரு மாதம் எல்லா நாளும் அலுவலகம் செல்ல வேண்டி வந்து விட்டது. இப்போதுதான் கொஞ்சம் விடுதலை கிடைத்தது போல உள்ளது. 

அக்கரைப்பச்சை என்பது எப்போதும் உண்மைதான். எப்படியோ இந்த ரணகளத்திலும் கொஞ்சம் கிளுகிளுப்பாக ஏதாவது பதிவிட வேண்டும் என்று தோன்றுகிறது. வருடா வருடம் ஏதாவதுஒரு சபதம் எடுப்பதற்கு பதில், ஒவ்வொரு வருடமும் ஒரே சபதம் தான். இந்த வருடமாவது ஒழுங்காக பதிவிட வேண்டும் என்பதுதான் அது. முதல் மாதமே விட்டு விட்டேன். பார்ப்போம். 

விமர்சனங்கள்: 

பேட்ட: நான் முன்பே நிறைய முறை சொல்லியுள்ளேன். சிறு வயதிலிருந்தே கமல் ரசிகன். ஆனாலும், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, மனிதன் போன்ற படங்கள் எப்போது போட்டாலும் விரும்பிப் பார்த்த காலங்கள் உண்டு. பேட்ட பார்க்கும் போது அப்படிதான் உணர்ந்தேன். இரண்டாம் பாதி நீளம், நிறைய லாஜிக் குறைபாடுகள் என்று இருந்தாலும் 3 மணி நேர பொழுது போக்கிற்கு உத்திரவாதம் உண்டு. கடைசி நேர 'கார்த்திக் சுப்பாராஜ்' வகை திருப்பம் இருந்தாலும், மற்றபடி பெரிய திரைக்கதை திருப்பமெல்லாம் இல்லை. ஓட்டைப் பானையாக இருந்தாலும், தங்கப்பானை அல்லவா. 

விசுவாசம்: படத்தில் அடுத்து என்ன காட்சி வரும் என்பதை என் 6 வயது மகளே சொல்கிறாள். அவ்வளவு அரதப்பழசான திரைக்கதை. படத்தின் நீளம் மட்டுமே படத்தின் பலம். 

சர்க்கார்: இது இன்னொரு வகையான மொக்கை. முருகதாஸ் தன்னை இன்னொரு ஷங்கர் என்று நினைத்துக் கொள்கிறார் போல. 

2.O: துள்ளுவதோ இளமை படத்தில் எல்லா தவறையும் செய்த பிறகு இறுதியில் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று விஜயகுமார் சொல்வார். அதே போல தேவையில்லாத ஆணியெல்லாவற்றையும் பிடுங்கி விட்டு, கடைசியில் "சோறு வைங்க, தண்ணி ஊத்துங்க" என்று சொல்வது என்ன வகையோ. பேய்ப்படமும் இல்லாமல், தொழில்நுட்பமாகவும் இல்லாமல் இரண்டுக்கெட்டானாக உள்ளது. என் மகள் முப்பரிமாண முறையில் ரசித்துப் பார்த்தாள். 

இவை அனைத்துமே திரையரங்கம் சென்று பார்த்தோம். உண்மையில் கொடுத்த பணத்திற்கு 3 மணி நேர பொழுதுபோக்கிற்கு பரவாயில்லை. 

செக்கச் சிவந்த வானம்: மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்' படித்திருப்பார் போல மணிரத்னம். பதவிக்காக தந்தை, சகோதரர்களையே கொல்லும் அளவிற்கு செல்லும் மகன்கள், திருப்பம் தரும் தளபதி என்று அடுத்த வலது, உடனே இடது என தெரிந்த திருப்பங்கள்தான் உள்ளன. 

மற்றபடி இன்னும் ராட்சஸன், வட சென்னை, பரியேறும் பெருமாள் படங்கள் கண்டிப்பாக தவற விடக்கூடாதவை. அடங்க மறு, கனா, துப்பாக்கி முனை, ஜருகண்டி, திமிரு புடிச்சவன் படங்களை கண்டிப்பாக பார்க்கலாம். வருத்தப்பட வைக்காத படங்கள். 

இசை:

இளையராஜாவைப் பார்த்தால் பாவமாக உள்ளது. ஏதோ ஓரிரு கல்லூரிகளுக்குத்தான் செல்கிறார் என்று பார்த்தால், எல்லா கல்லூரிகளுக்கும் சென்று 'நான் மட்டுமே இசையமைப்பாளர், ஆனால், எனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது' என்று சொல்லி வருகிறார். 

இப்போதெல்லாம் இளையராஜாவிடம் எந்த இயக்குனர் சென்றாலும், அவரது பேச்சுக்கு மறு பேச்சு சொல்லாமல் எந்த இசை கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறார்கள் போல. அதனாலேயே பாடல்கள் மனதில் பதிய மறுக்கின்றன. இருந்தாலும் பின்னணி இசையில் மனிதன் இன்னும் பின்னுகிறார். 

எனக்கு அவர் படங்களை எல்லாம் விட்டு விட்டு How to Name it போல தனி இசைக்கோர்வைகளை வெளியிடலாம். இன்னும் அவரிடம் உள்ள திறமைகளை அவரே வெளிக்கொண்டு வரலாம். ஞானி, எல்லாம் அறிந்தவர், இசைக்கடவுள் என்ற புகழ்ப்போர்வையை வைத்து அவரது திறமைகளை மூடி வைத்து விட்டனர். பார்ப்போம். 

ரஹ்மான் வர வர பின்னுகிறார். சர்க்கார், செக்கச்சிவந்த வானம், 2.ஓ படங்களில் நிஜமாகவே அவரது பின்னணி இசை அட்டகாசம். நான் கடைசியாக ரஹ்மானின் பாடல்களைக் ஒழுங்காக கேட்டது 24 படத்தில் தான். இப்போது மீண்டும் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் இருந்தது இப்போதுதான். 

யுவன் எல்லாம் சராசரியாக மாறி விட்டார். அனிருத் பட்டையை கிளப்புகிறார். இப்போதைக்கு என் பெண்ணிற்கு பிடித்த பாடல் 'மரணம் மாஸு மரனம் பாடல்தான். வருங்காலங்களில் எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..