Monday, April 29, 2019

வார இறுதி படங்கள்!!!

பார்த்து, ரசித்த, கண்டிப்பாக விடுமுறையை வீட்டில் கழிக்க சில திரைப்படங்கள். அனைத்துமே இருக்கை நுனியில் (seat edge thriller) அமர வைக்கும் படங்களே. 

அந்தாதுன் - ஹிந்தி - 2018 (Andhadhun):

ஒரு பார்வையற்ற இசைக்கலைஞன். அவன் காதல், ஒரு கள்ளக்காதல், அதனால் ஒரு கொலை, யாருமில்லாதவர்களின் உறுப்புகளைத் திருடி விற்கும் கும்பல், இவர்களோடு வயலில் உள்ள காய்கறிகளை உண்ணும் முயலைக் கொல்லும் நோக்கத்தோடு துப்பாக்கியுடன் ஒரு விவசாயி இவர்கள் அனைவருக்கும் இடையே நடக்கும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டமே அந்தாதுன். 



படத்தில் சில திருப்பங்களை நீங்கள் உலகப்படம் பார்ப்பவர்களாக இருந்தால், சுலபமாக யூகிக்கலாம். ஆனாலும், அதைத்தாண்டி படத்தில் நிறைய சிறு சிறு ஆச்சரியங்கள் உள்ளன. நாயகன், தபு, நாயகனுக்கு உண்மையிலேயே பார்வை இருக்கிறதா என்று சோதிக்கும் சிறுவன் என அனைவருமே கவனம் ஈர்க்கின்றனர். படம் உண்மையில் நகைச்சுவைப்படம்தான், இருந்தாலும், இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்ப விடாமல் கவனம் ஈர்க்க வைக்கிறது. 

தடம் - தமிழ் - 2019:

ஒரு கொலை. கொலைகாரன் ஒரு புகைப்படத்தில் உள்ளான். ஒரே பிரச்சினை, ஒரே மாதிரி இரண்டு பேர். இரண்டு பேரில் ஒருவர்தான் குற்றவாளி, யார் அது, எதற்காக கொன்றான், தண்டனை கிடைத்ததா இல்லையா என்பதை, நிஜமாகவே கடைசி வரை அங்கும், இங்கும் திரும்ப வைக்காமல், நிஜமாகவே மண்டை காய வைத்து விட்டார்கள். உண்மையில் அட்டகாசமான திரைப்படம். 



பொதுவாக துப்பறியும் படங்களில் இவனா, அவனா, என்று நிறைய பேரை சந்தேகப்படுமாறு காட்டுவார்கள். இதில் இரண்டே பேர். இவனா, அவனா என கடைசி வரை, அப்பப்பா. அதிலும் காவல் துறையில், வயதில் சிறியவர் பெரிய பதவியில் இருந்தால் என்ன நடக்கும், ஒருவனை சிக்க வைக்க காவல் துரை எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை எல்லாம் சரியாக காண்பித்துள்ளனர். ஆய்வாளருக்கும், நாயகனுக்கும் உள்ள பிரச்சினையை காட்சிகள் இன்றி வசனங்களில் சொன்ன விதம், கடைசியில் நீதிபதி பேசும் இடம் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. மகிழ் திருமேனியின் அனைத்து படங்களுமே தவற விடக்கூடாதவை. அதில் இது முதலிடம். 

அந்தரிக்ஷம் - தெலுங்கு - 2018 (Anthariksham):

இதுவரை நீங்கள் பார்த்த அனைத்து ஆங்கில திரைப்படங்களில் வருவதுதான். ஒரு பழைய செயற்கை கோள் கட்டுப்பாட்டை இழக்கிறது. அதை மீட்க வேண்டும் என்றால், நாயகன் வர வேண்டும். அவனோ வழக்கம் போல வேறு ஒரு பிரச்சினையால் இது எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறான். இப்போது, இதையும், தன் பழைய கணக்கையும் எப்படி தீர்க்கிறான் என்பதுதான் படம். 



தமிழில் டிக் டிக் டிக், தமிழின் முதல் விண்வெளி படம் என்று மொக்கையாக ஒரு படம் எடுத்தார்கள். ஆனால், தெலுங்கில், நிஜமாகவே நன்றாக எடுத்துள்ளார்கள். என்ன, கொஞ்சம் இல்லை இல்லை, நிறையவே இயற்பியல் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் பக்காவாக ஆராய்ந்து எடுத்துளார்கள். கட்டுப்பாட்டு அறை, செயற்கை கோள், விண்வெளி என்று அனைத்தும், ஆங்கில படங்கள் அளவுக்கு உள்ளன. நல்ல முயற்சி. 

வெள்ளைப்பூக்கள் - தமிழ் - 2019:

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி, காதல் திருமணம் செய்து, அமெரிக்காவிலேயே குடியேறிய மகனின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் சில கடத்தல்களை, தனது பாணியில், அங்குள்ள நண்பனோடு சேர்ந்து ஆராய்கிறார். கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் கதை. 



படத்தில் இசையமைப்பாளர் உட்பட நிறைய பேர் MITயில் படித்தவர்கள். அவர்களுக்காக பார்த்தேன். பரவாயில்லை. எதிர் பார்த்ததை விட நன்றாகவே இருந்தது. விவேக், சார்லி அட்டகாசமான நடிப்பு. திறமையான நடிகர் சார்லி, நகைச்சுவை, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்கக்கூடியவர் அவர். இன்னும் பல நல்ல வாய்ப்புகளை அவருக்கு கிடைக்க வேண்டும். 

தில்லுக்கு துட்டு 2: 

பெரிதாக ஒன்றுமில்லை. ஊருக்குள் அட்டகாசம் செய்யும் நாயகனை சிக்க வைக்க, மந்திரவாதியின் பெண்ணுடன் காதல் வர வைக்கின்றனர். காதல் என்றாலே கொல்ல துடிக்கும் பேயைத் தாண்டி, எப்படி நாயகியை திருமணம் செய்கிறார் நாயகன் என்பதுதான் கதை. 



என் பெண்ணிற்கு மிகவும் பிடித்த படம். தொடர்ச்சியாக நான்கைந்து முறை கூட பார்க்கிறாள். அதிலும் இரண்டாம் பாதியின், இரண்டாம் பாதி, அதாவது பேய் வீட்டிற்கு போன பிறகு நடக்கும் காட்சிகள் வயிற்றைப் பதம் பார்க்கும். நிச்சயம் பொழுதுபோக்கிற்கு உகந்த படம். 

இவை தவிர, தப்பித்தவறி கூட பார்த்து விடக்கூடாத படங்கள் சில உள்ளன. 

பொட்டு: யப்பா, முடியலடா சாமி. மனசுல பெரிய லாரன்ஸ் அப்டின்னு நெனப்பு போல. 

தேவ்: என்னவாம். ஒண்ணுமில்ல. சும்மா ஊர் சுத்துனாங்களாம். அப்ப எடுத்த கொஞ்ச நஞ்சத்த படம்னு சொல்றாங்க. 

கண்ணே கலைமானே: நெடுத்தொடரை விட தூரமாக போகிறது, போகிறது. கடைசியில் படம் முடியவில்லை, அதுதான் கொடுமை. 

பூமராங்: Face/off ஒரு சிட்டிகை. தெலுங்கில் வந்த எவடு இரண்டு கரண்டி, கடைசியாக கொஞ்சம் கத்தி படத்தை போட்டு கடைந்தால், பூமராங். 

ஐரா: இருப்பதிலேயே பெருங் கொடுமை இதுதான். கருப்பு நயன்தாரா, வெள்ளை நயன்தாராவை பழி வாங்க ஒரு காரணம் வரும் பாருங்கள். பொதுவாக கடைசியாக வரும் திருப்பங்கள், படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும், பரவாயில்லை என்று தோன்றும். ஆனால் இதில், அப்படியே தலைகீழ். 

அவ்வளவுதாங்க. கண்டிப்பாக குறிப்பிட்டுள்ள படங்களை பாருங்கள்.  

2 comments:

  1. அருமையான கண்ணோட்டம்
    பாராட்டுகள்

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..