Sunday, December 22, 2019

வருடக் கடைசி விமர்சனங்கள்!

அப்பப்பா.. ஒரு பதிவு போடலாம் என்பதற்குள், முடியவில்லை. சரி. சட்டு புட்டென்று பதிவிற்கு போய் விடுவோம். 

மகளுக்காக The Lion King, Frozen 2 என்று அடிக்கடி திரையரங்கம் செல்வதால், பெரியவர்களுக்கான படங்களை இப்போதெல்லாம் வீட்டிலேயே பார்த்து விடுகிறோம். அதுதான் புதுப் படங்கள் அனைத்தும் அதிகபட்சம் 30 நாட்களில் OTTயில் வந்து விடுகிறதே. நாங்கள் எப்போதோ கேபிள் இணைப்பை துண்டித்து விட்டோம். இன்னும் குறிப்பாக சொன்னால், எப்போது உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள் என்று சொன்னார்களோ, அப்போதே அதை தலை முழுகி விட்டோம். 

Amazon Prime, ஹாட்ஸ்டார், Zee5 இவை போதும் போதும் எனும் அளவிற்கு படங்களைக் கொடுக்கின்றன. Netflix மட்டும் இன்னும் கொஞ்சம் விலையைக் குறைத்தால் பரவாயில்லை. 199 ரூபாயில், நம்மால் TVயில் பார்க்க முடியாது என்பது பெரும் குறை. கொஞ்சம் மனது வைக்கவும். 

தம்பி: 

மகளுக்காக அல்லாமல், எங்களுக்காகவும் போய்ப் பார்த்தோம். அருமையான family thriller படம். 15 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகன், திடீரென கிடைக்கிறான், ஆனால், அவனாலும், அவனுக்கும் ஏற்படும் பிரச்சினைகள், யாரால் ஏற்படுகின்றன, எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படம். 


முதல் பாதி கொஞ்சம் மொக்கையாகஇருந்தாலும், இரண்டாம் பாதியில் அதை சமாளித்து விடுகிறார்கள். படத்தில் நகைச்சுவை குறைவென்றாலும், கடைசி காட்சியில் கார்த்தி சொல்லும் வசனத்திற்கு திரையரங்கமே விழுந்து விழுந்து சிரித்தது. கிட்டத்தட்ட த்ரிஷ்யம் போலவே, குடும்பத்தை காப்பாற்ற என்ன வேண்டுமென்றாலும் செய்வதுதான் ஒரு வரி கதை. 

அசுரன்:


இதிலும் அதே போலத்தான். குடும்பத்தைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யும் நாயகன். ஆனாலும் அதில் பஞ்சமி நிலம், சாதி வெறி, நிலம் என்று கலந்து செவிட்டில் அடித்தாற் போல சொல்லி உள்ளார்கள். பூமணியின் வெக்கை கதையை பல வருடங்களுக்கு முன்னாள், எங்கேயோ நூலகத்தில் படித்த ஞாபகம். படம் பார்க்கும்போது எதுவும் நினைவுக்கு வரவில்லை. தவற விடக்கூடாத படம். 

கைதி:


நம்பவே முடியாத ஒரு வரி கதையை (எல்லா பெரிய அதிகாரிகளும் ஓரிடத்தில் கூடுவது, கமிஷனர் அலுவலகத்தில் எந்த காவலரும் இல்லாமல் இருப்பது) எடுத்து, அதை வெற்றிக்கரமாக படமாக்கி உள்ளார்கள். அதிரடிக்காட்சிகள், பாடல்களோ, நாயகியோ இல்லாதது மிகப்பெரும் பலம். அடுத்து பின்னணி இசை. இதுவும் தவற விடக்கூடாது படம்தான். 

Badhaai Ho (ஹிந்தி): 

ஒரு ஜெயகாந்தனின் சிறுகதை. தலைப்பு நினைவில் இல்லை. காதல் பிரச்சினையில் (என்றுதான் நினைக்கிறேன்) வீட்டை விட்டு வெளியே போன மகன், மீண்டும் வீட்டிற்கு வருகிறான். எல்லோரும் அவனையும் அவன் அம்மாவையும் சேர்த்து திட்டுகிறார்கள். என்னவென்று பார்த்தல், அவனது அம்மா கர்ப்பமாக இருக்கிறார். "மருமகளும் மாமியாரும் ஒண்ணா புள்ள பெத்துக்க போறாங்க" என்றெல்லாம் பேசுவார்கள். அந்த மகன் அம்மாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்வார். 


இதே போல மலையாளத்திலும் ஒரு படம் வந்ததாக நினைவு. இதில் அதை அப்படியே நகைச்சுவையாக மாற்றி உள்ளனர். கல்யாண மகத்தில் மகன்கள் இருக்கும்போது, அம்மா கர்ப்பம் ஆகிறார். அதை மாமியார், மகன்கள், மகனின் காதலி, அவளது அம்மா, நண்பர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் படம். 

Article 15 (ஹிந்தி): 

அந்தாதுன் படம் பார்த்ததில் இருந்தே ஆயுஷ்மானின் விசிறி ஆகி விட்டேன். அதன் பிறகு பதாய் ஹோ. பிறகு இந்தப் படம். மூன்றும் மூன்று விதம். 


உத்தர பிரதேசத்தில் ஏதோ ஒரு கிராமத்தில், 2 சிறுமிகள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கி இறந்து கிடக்கிறார்கள். அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதால், அவர்களின் பெற்றோர்களே அவர்களை கொன்று விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. வெளிநாட்டில் படித்து, தந்தைக்காக காவல் துறையில் வேலை செய்யும் நாயகன், அதன் பின்புலத்தை ஆராய்கிறான். அதில் வரும் சாதி வெறி, வன்மம் எல்லாம், அசுரன் படம் போலவே முகத்தில் அறைகின்றன. 

இதை தமிழில் எடுக்கிறார்களாம். ஒரு காட்சியில், தனக்குக்கீழ் உள்ள காவலர்களிடம், "நீங்களும் அதே சாதிதான்" என்பான் நாயகன். "நாங்களும் கீழ் சாதிதான், ஆனா, அவங்களுக்கு மேல" என்பார் ஒருவர். அதிலும் ஒவ்வொருவரும் தான் இன்னின்ன சாதி என்பதை சொல்லும் காட்சி வேறு இருக்கும். தமிழில் "ஆண்ட சாதி" என்ற வார்த்தையையே வர விடாத ஆட்கள் நம்மாட்கள். பார்ப்போம். 

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

2 comments:

  1. கொடுத்து வைத்த மகாராசாவே... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நான் எதையும் கொடுக்கவும் இல்லை. வைக்கவும் இல்லண்ணே..

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..