Sunday, October 20, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

கடந்த சில மாதங்களாக அலுவலகத்தில் வேலை அதிகம், வீட்டிலும் வேலை என்று இருந்ததால் பதிவு போட முடியவில்லை என்று சொல்ல ஆசைதான். ஆனால், உண்மையில் பதிவு போட விருப்பம் இல்லை என்பதுதான் உண்மை. அப்பாடா என்கிறீர்களா.

இப்போதெல்லாம் படிப்பது மிகவும் குறைந்து விட்டது. நானே யோசித்துப் பார்க்கிறேன். கடைசியாக எப்போது புத்தகமாக வாங்கிப் படித்தேன் என்பதே எனக்கு நினைவில்லை. விகடன் கூட இணையத்தில்தான். இப்போது இணையத்தில் கூட எல்லாமே காணொளிக் காட்சிகளாக மட்டுமே மக்கள் ரசிக்கிறார்கள். நண்பர்கள் கூட விமர்சகராக மாற சொன்னார்கள். சரி சரி விடுங்கள்.

நான் விமர்சிக்கும் படங்கள் எல்லாம் அதற்குள் youtubeலேயே வந்து விடும். மற்ற எதையாவது படித்தாலே எரிச்சல் வரும். அதை இன்னும் பேசி காணொளிக் காட்சியாக இட்டால், யார் பார்ப்பார்கள். இப்போதுதான் மகளை கொஞ்சம் கொஞ்சம் படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன்.

அவ்வப்போது புத்தக கண்காட்சிக்கு (ஆங்காங்கே நடக்கிறதே) சென்றாலும் இந்தப் புத்தகமும் எனக்காக வாங்குவதில்லை. மகளுக்காகவே. எல்லா இடங்களிலும் குழந்தைக்களுக்கான புத்தகங்களும், இல்லையெனில் சமையல், ஜோதிடம் பற்றிய புத்தகங்களுக்கே மக்கள் செல்கிறார்கள். இது எல்லாக்காலங்களிலும் இருப்பதுதான். வீட்டில் படிப்பதற்கு நாளிதழ் வாங்கினாலும் அது எடைக்கு போட மட்டுமே உபயோகம் ஆகிறது. இன்னும் 10 வருடம் கழித்து எப்படி இருக்குமோ தெரியவில்லை.  

சரி. சில படங்கள் பற்றி பார்ப்போம். 

கோமாளி: ஒரு படத்துடன் நாம் ஒன்ற வேண்டுமானால், ஏதாவது ஒரு நிகழ்வு நம் வாழ்க்கையில் நடந்திருக்க வேண்டும். இந்தப்படத்தில் நாயகன் 1999ல் புதிய வகுப்பிற்கு செல்வான். அது பதினொன்றா அல்லது பனிரெண்டா என்பதை தெளிவாக சொல்லா விட்டாலும், மேல்நிலைக்கல்வி என்று எடுத்துக்கொள்ளலாம். நானும் அதே வருடம் படித்ததால், சட்டென்று ஒரு மின்னல். மற்றபடி, படத்தின் முதல் பார்வையே கதையை தெளிவாக சொல்லி விட்டதால் இன்னும் கொஞ்சம் ஆர்வம் கூடி விட்டது. கடைசியாக, கல்லூரி நண்பர்கள் 4 பேர் சந்தித்து, ஒன்றாக சேர்ந்து பார்த்ததில் படம் மறக்க முடியாததாக மாறி விட்டது. 



தோழர் வெங்கடேசன்: முன்னொரு காலத்தில், தினத்தந்தியில் அடிக்கடி பார்க்கும் ஒரு செய்தி, விபத்திற்கான நஷ்ட ஈடு தராததால், பேருந்து ஜப்தி. இன்று வரை அந்த செய்திகள் வந்து கொண்டே உள்ளன. அதன் பின்னால் இருக்கும் நடப்பு, அந்தப் பேருந்தை வைத்திக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள் என்றெல்லாம் தெளிவாக காட்டும் படம். அருமையா சிறு முதலீட்டில் வந்த படம். நானே தரவிறக்கம் செய்துதான் பார்த்தேன். இணையத்தில் எங்குமே வெளியாகவில்லை. கண்டிப்பாக பார்க்கவும். 



தொரட்டி: இன்னொரு சிறு முதலீட்டுப் படம். 80களின் இன்னொரு படம். அதற்காக இளையராஜா, பழைய போஸ்டர் என்றெல்லாம் இல்லை. பணத்திற்காக திருடும் மூவர், கிடை போட்டு பிழைக்கும் நாயகன் நாயகி, காட்டிக்கொடுத்தல், பழி வாங்கல் என்று சற்றே அரைத்த மாவுதான் என்றாலும், பார்க்க நன்றாக உள்ளது. 



சாஹூ: தற்போது அமேசான் பிரைமில் வந்துள்ளது. இந்த 3 படங்கள் தந்த தாக்கத்தைக் கூட இது தரவில்லை. நிறைய பேர் வருகிறார்கள். யுத்தம் செய் படத்திலும் இதே போல. நிறைய ஆட்களைப்பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். என்ன நடக்கிறது என்றே புரியாது. இதிலும் அதே போலத்தான். திடீரென KGF போல ஒரு கதை சொல்கிறார்கள். என்னவோ போடா மாதவா. 



சிகப்பு மஞ்சள் பச்சை: அக்னி நட்சத்திரம், நேருக்கு நேர் வரிசையில் மாமன் மச்சான் படம். மூன்று படங்களிலும் அந்த உறவுமுறை பிரச்சினையை மட்டும் பேசாமல், அவர்கள் சேர வேண்டும் என்று சம்பந்தமே இல்லாமல், ஒரு கெட்டவன் வருவான். நடுவில் பெண்கள் மாட்டிக்கொண்டு விழிப்பார்கள். ஆனாலும் நம்மை யோசிக்க விடாமல் படத்தோடு ஒன்றி விடுமாறு திரைக்கதை அமைத்துள்ளார் சசி. பார்க்கலாம். 



இன்னும் ஒத்த செருப்பு, அசுரன், மகாமுனி என்று பார்க்க வேண்டிய பட்டியல் நிறைய உள்ளது. 

முன்பு சொன்னது போல, பதிவு எழுத வேண்டுமா என்று பல முறை தோன்றினாலும், கடமையை செய், பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வார்த்தைக்கிணங்க, பதிவிடுவது நம் கடமை. அதை செவ்வனே செய்வோம். படிக்காதவர்கள் ரத்தம் கக்கி, சீச்சீ வேண்டாம், இணைய வேகம் குறையாக கிடைக்க வேண்டுகிறேன்.  

2 comments:

  1. இந்தக்கதை எல்லாம் வேண்டாம்...

    அவ்வப்போது பதிவு வேண்டும் - என்னைப்போல் அல்லாமல்....!

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..