Sunday, April 19, 2009

வாசிப்பனுபவம் (ஆரம்பக்கல்வி)

சுவாசிப்பு போல வாசிப்பு என்பதும் எனது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத செயல். எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் அதேதான். இந்த அனுபவங்களை ஒரே பதிவில் இட முடியாது என்பதாலும், பின்னால் பல பதிவுகள் இட வேண்டும் என்பதாலும் சில பல பாகங்களாக இடுகிறேன்.

அந்த காலத்தில்(?), என்னை LKG, UKG படிக்க வைக்க வேண்டுமென்று என் வீட்டில் ஆசைப்பட்டனர். பிற்காலத்தில் எப்படியும் PG பண்ண மாட்டேன் என்று அப்போதே தெரியுமோ என்னவோ. ஆனால் எங்கள் ஊரில் அப்போது அந்தளவு வசதி இல்லாததால், அங்கன்வாடியில்தான் (எங்களூரில் பால்வாடி என்று பெயர்) சேர்ந்தேன். வீட்டிலிருந்து பத்தடி தள்ளித்தான் அது. அங்கே அணில், ஆடு என்று சித்திரம் மூலம் படிப்பு தொடங்கியது. வீட்டிலும் அ, ஆ, என படிப்பு தொடங்கியது.

அங்கன்வாடி முடிந்ததும், அடுத்து பத்தடி தள்ளியிருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி தொடங்கியது. இரண்டாவது முடியும்போது ஓரளவு எழுத்துக்கள் தெரிய ஆரம்பித்தவுடனே, எனது திறமையை யாருக்காவது காண்பிக்க வேண்டுமென்று தோன்றியது. அப்போது (இப்போதும்) எங்கள் பெட்டிக் கடைக்கு தினத்தந்திதான் வாங்குவோம். அதில் நம் கண்ணை உடனே கவர்வது 'கன்னித் தீவுதான்'. தினமும் அதை படித்து படித்து என் அம்மாவிடம் சொல்வதுதான் என் பணி. யோசித்துப் பார்க்கும்போது, பொறுமை என்பதை அம்மாவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என தோன்றுகிறது.

கன்னித்தீவு அதன் பின் நான் ஊரில் இருந்த தொடர்ந்து இருந்தவரை (கல்லூரியில் சேரும் நாள் வரை.. கிட்டத்தட்ட பதினொரு வருடங்கள்) தவற விட்டதேயில்லை. எங்கேயாவது ஊருக்கு போனால் கூட, வந்து ஊரில் இல்லாத நாட்களில் வந்த செய்தித்தாள்களை எடுத்து படிப்பேன். நான் செல்லும் ஊரில் தினத்தந்தி வந்தாலும், எங்கள் கடையில் படித்தால்தான் எனக்கு சந்தோஷம். நானே அதன் பின் கதையை தொடர முடியும் என்று நம்பிக்கை வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முதலில் கப்பல் பயணம். கப்பல் கவிழ வேண்டும். கடலுக்குள் ஒரு ஆபத்து.. அங்கே ஒரு இளவரசியை காப்பாற்ற வேண்டும். அவளை தாய் நாட்டில் சேர்த்து விட்டு, லைலா சிறியவளான கதை சொல்ல வேண்டும். மீண்டும் ஒரு கப்பலை வாங்கி, பயணத்தை தொடர வேண்டும். சில சமயம் இளவரசன் வர வேண்டும். முக்கியமான விஷயம், அடிக்கடி 'அப்போது' என்று தொடரும் போட வேண்டும்.

இது தவிர தினத்தந்தியில் கவர்ந்தது, 'சிரிப்பு' மற்றும் 'ஆண்டியார் பாடுகிறார்'. ரொம்ப நாளாக, எனக்கு புரியாத விஷயமாக இருந்தது, 'இந்த படத்திற்கு வசனம் தேவையில்லை.' இது என்னடா சிரிப்பு, அடிக்கடி வேறு வேறு படங்களுடன் வருகிறதே? புரிய வெகு நாளாயிற்று.

'இங்கு வெளியான இரண்டு சிரிப்பிற்கும் ரூ. 15 பரிசு. இங்கே படைப்பு இடம் பெற, 15 பைசா அஞ்சலட்டையில் இந்தியன் இங்கினால் வரைந்து அனுப்பவும்.' நானும் இங்க்கை சட்டையில் கொட்டி, வீட்டில் உதை வாங்கியதுதான் மிச்சம்.

ஆண்டியார் பாடுகிறார்.. 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சியில் வந்த பாடலின் வரிகள் வந்தால், உரு தட்டிக்கொண்டு போய், திறமையைக் காண்பிப்பேன்.

அப்போதெல்லாம், தொலைக்காட்சியில் வரும் (அட, நம்ம தூர்தர்ஷன் தாங்க) வாராந்திர தொடர்களின் கதையும், ஞாயிறு போடும் திரைப்படங்களின் கதையும் அன்றைய இதழில் வரும். அதையும், படித்து விட்டு போய், "டேய், இன்னைக்கு என்ன ஆகும் தெரியுமா?" என்று சொல்வேன். அப்போது எங்கள் வீட்டில் தொலைகாட்சி இல்லை. எனவே, ஏதாவது நண்பன் வீட்டில், அவர்களுடன் சேர்ந்துதான் பார்ப்பேன். அப்போது "பாத்தியா.. நாந்தான் அப்பவே சொன்னேன்ல" என்பேன். [இதைப் பற்றி பின்னால் ஒரு தனி பதிவே இடுகிறேன்.]

இவை தவிர, நான் மற்றபடி படிப்பது, கொலை, கொள்ளை பற்றிய செய்திகள்தான். (நாங்கெல்லாம் அப்பவே ஊர்ல பெரிய ரவுடிங்க..). அவற்றை என் சொந்த சரக்கோடு, பள்ளியில் கதை கட்டுவதுதான் அப்போதைய குலத் தொழிலே. [அப்போது ஊரிலேயே, எங்கள் கடைக்கு மட்டும்தான் செய்தித்தாள் வரும். எனவே, என் நண்பர்களுக்கு நான் சொல்வதுதான். மற்ற யாரும் அங்கே வந்து படிக்க மாட்டார்கள். அவர்கள் வீட்டில் யாரும் பார்த்தால் உதைதான். "ஒழுங்கா மொதல்ல பாடத்த படி.. அப்புறமா இத பாக்கலாம்.."].

இப்படியாக, என் ஆரம்பக் கல்வியின் பெரும்பகுதி சிரிப்பு, சிந்துபாத், ஆண்டியார், கொலை, கொள்ளை என்று தினத்தந்தியுடன் வளர்ந்தது. உயர்நிலைக் கல்வி அடுத்த பதிவில்....


9 comments:

  1. ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!! -
    என்ற பதிவை இப்பொழுதுதான் படித்தேன். இளைய ராஜாவின் அதி தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்.

    "பாரதியும், ராஜாவும் ஒருவகையில் ஒன்று... அவர்கள் வாழும் காலத்தில் தீவிரமாக கவனிக்கப் படவில்லை..." என கமல் எல்லா மேடைகளிலும் புலம்புவது உண்மை தான் என்று பல முறை யோசித்து இருக்கிறேன்.நம் மக்களுக்கு எங்கு தெரிகிறது.

    உங்களுடைய பதிவு அருமையாக இருந்தது.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி நண்பரே!! அது என்னுடைய சிறு ஆதங்கம்தான்.. கமல் சொல்வது என்னவென்றால் "என் ராஜாவின் பெருமையை அறியாதவர்கள் பின்னால் அவருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் சிக்கி மிதிபடுவார்களாக".. எப்போது சொன்னார் என்று தெரியவில்லை.

    நண்பர்களுடன் சண்டை முடியும்போது, ரஹ்மான் என்றவுடன் அனைவரும் "நமக்கே" என்போம்.. ராஜா என்றவுடன் "எனக்கே" என்று அனைவரும் தனித்தனியாக சொல்வோம். ஏனென்றால் இசையை சிறிது அறிந்தவர்கள் கூட ராஜாவை தவிர்க்க முடியாது.

    ReplyDelete
  3. ரொம்ப நாள் கழிச்சு பதிவா...?
    பலே...
    நல்லா இருக்கு அனுபவங்கள் அரவிந்த். இரண்டாவது படிக்கறப்பயே திறமை காட்ட ஆரம்பிச்சாச்சா...?>
    நீங்க போட்டிருக்கிற இப்பதிவு அனுபவங்களில் 95 சதம் என்னுடைய அனுபவங்களும்தான்.
    நானும் தமிழ் வாசிக்கக் கற்றுக் கொண்டதே ‘இந்த ‘சிரிப்பு’, ஆண்டியார்’, ‘சாணக்யன் சொல்’ மூலம்தான்.
    என் பதிவில் ‘நினைவில் நின்ற புத்தகங்கள்’ போட்டிருப்பேன்.முடிந்தால் வாசித்துப் பாருங்கள்..

    ReplyDelete
  4. நன்றாக இருந்தது.. பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள். சிரிப்பும் வந்தது.

    ReplyDelete
  5. நன்றி தமிழ்ப்பறவை... உங்கள் பதிவை ஏற்கனவே படித்துள்ளேன். ஆரம்ப காலங்களில் மட்டுமே உங்கள் அளவுக்கு படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அடுத்த பதிவு விரைவில் வரும். படித்து விட்டு சொல்லுங்கள்.

    ReplyDelete
  6. பின்னூட்டத்தை கன்னித்தீவிலிருந்தே துவங்குகிறேன்.ஹிட் கணக்கா 17ஆயிரத்து சொச்சத்துல கதை ஆரம்பமாகுது.நானும் துவக்க எண்களின் கதைகளை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.முடியவில்லை.கதை தெரிந்தா சொல்றது?

    ReplyDelete
  7. கதைதானே!

    ஒரு ஊர்ல ஒரு ராசாவாம்... அவருக்கு ஒரே ஒரு பொண்ணாம்.. ஒலகத்திலேயே ரொம்ப அழகாம்..அவதான் லைலா.. அவ மேல ஆசைப்பட்ட ஒரு மந்திரவாதி அவளை கண்ணாலம் கட்டணும்னு ஆசைப்பட்டு கேட்டானாம்.. ராசா 'முடியாது போடா' அப்படின்னு சொல்லிட்டாராம்.. ஒடனே மந்திரவாதி கோவப்பட்டு அவளை மந்திரம் போட்டு குள்ளமாக்கிட்டு எஸ் ஆயிட்டானாம்...

    "அய்யய்யோ!! எம்பொண்ணு இப்படி ஆயிட்டாளே" ரொம்ப வருத்தப்பட்டாராம்.. உடனே அவரோட தளபதி சிந்துபாத்து, "நான் இளவரசிய பழையபடி மாத்தி இட்டாரேன்" அப்படின்னு அவளை தூக்கி ஒரு பெட்டில வச்சு கெளம்பறான்..

    இப்ப டைட்டில் போடறோம்... "கன்னித்தீவு!!!"

    கெளம்பி கடல்ல போகும்போது ஒரு ஆபத்து... அதிலிருந்து தப்பிக்கிறான்... மறுபடி ஆபத்து... ... அதிலிருந்து தப்பிக்கிறான்... மறுபடி ஆபத்து... ... அதிலிருந்து தப்பிக்கிறான்... மறுபடி ஆபத்து... ... அதிலிருந்து தப்பிக்கிறான்... மறுபடி ஆபத்து... ... அதிலிருந்து தப்பிக்கிறான்... மறுபடி ஆபத்து... ... அதிலிருந்து தப்பிக்கிறான்... மறுபடி ஆபத்து... ... அதிலிருந்து தப்பிக்கிறான்... மறுபடி ஆபத்து... ... அதிலிருந்து தப்பிக்கிறான்... மறுபடி ஆபத்து... ... அதிலிருந்து தப்பிக்கிறான்... மறுபடி ஆபத்து...

    ஹல்லோ.. என்ன தூங்கிட்டீங்களா?? கத இன்னும் முடியலீங்க..

    ReplyDelete
  8. நண்பரே,
    கன்னித்தீவு பற்றிய ஒரு முழுமையான ஆராய்ச்சி பதிவு இங்குள்ளது:

    அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்'s கன்னித் தீவு - முடிவற்றக் கதையா?

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி நண்பரே. உங்கள் உரலிக்கு நன்றி. ஒரு முறை கேட்ட செவி வழி செய்திதான். தினத்தந்தியின் நிறுவனர், தனது உயிலில் அந்தக் கதையை முடிக்கக் கூடாது என்று சொல்லியுள்ளதாக சொன்னார்கள். எனவே தான், அது முடியாமல் தொடர்கிறது என்று கேள்வி.

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..