Friday, May 8, 2015

அம்மா!


அம்மா. உலகத்தில் 99 சதவிகித பேருக்கு பிடித்த (அல்லது பிடிக்கும் என்று சொல்கின்ற) பெண். நான் ஒரே மகன்தான் என்றாலும், செல்லம் எல்லாம் கிடையாது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது கூட துரத்தி துரத்தி அடித்துள்ளார்கள். நான் பொய் சொல்லவில்லை. எதற்காக, எதுவாக இருந்தாலும் ஓரளவுதானே? அளவிற்கு மீறினால் அடிதான்.

சிறு வயதிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து விட்டேன். அதுவும் குறிப்பாக சாப்பிடும்போது படித்துக் கொண்டே சாப்பிடுவேன். ஓரிரு முறை "சாப்டுட்டு படிடா" என்பார்கள். கேட்கவில்லை என்றால், முதுகு பழுத்து விடும். அதே போல தேர்வு நேரங்களில் "மத்த நாள் மாதிரி இல்ல. பரிட்ச வருது. இப்ப பாடத்த படி. லீவுல கத புக்க படிக்கலாம்" என்பார். கொஞ்ச நேரம் மட்டும் படிக்கறேன் என்று ஆரம்பிப்பேன். அப்புறம், ம்ம்ம் (அழுவுறேங்க).

அந்த காலத்து SSLC. எனவே நான் ஐந்தாவது படிக்கும் வரை அவரே சொல்லித் தந்தார். நானும் டை கட்டி ஸூ போட்டுக் கொண்டு LKG போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், பக்கத்தில் அப்படி பள்ளியும் இல்லை, பணமும் இல்லை. எனவே 6 வயதில் காது தொட முடிந்தவுடன் (புரியும் என்று நினைக்கிறேன்) ஒன்றாம் வகுப்புதான் சேர்க்க முடியும். அப்போதெல்லாம் மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலமே வரும். ஆனால், எனக்கு வீட்டிலேயே ABCD, அ ஆ இ ஈ எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.

பத்தடி எடுத்து வைத்தால் பள்ளிக்கூடம். தலைமை ஆசிரியரும் சொந்தக்காரர்தான். எனவே, சும்மாவே போய் கொஞ்ச நாள் பள்ளியில் இருந்தேன். ஆறாம் வகுப்பு பக்கத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பள்ளியில்தான் அனைவரும் சேருவார்கள். சைக்கிள் தேவை. ஆனால், என்னையோ 5 கிலோ மீட்டர் தள்ளி உள்ள பள்ளியில் சேர்த்தார். எங்க ஊரில் இருந்து யாரும் அங்கு சேர மாட்டார்கள். பேருந்தில்தான் போய் வர வேண்டும். சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லி விட்டார். இல்லையென்றால் நாமக்கல்லில் இருந்து அந்தப் பள்ளிக்கு எங்கள் ஊர் வழியாகத்தான் போக வேண்டும். எனவே, நிறைய ஆசிரியர்கள் அப்படித்தான் போவார்கள். அவர்களுடன் போய் வரலாம். அதை விட முக்கியம். அப்போது இருந்த தலைமை ஆசிரியர் சொந்தக்காரர். எனக்கோ எரிச்சல்.

அப்போது எட்டாவது வரையே இலவச பாஸ். "சரி அப்புறம் சைக்கிள் வாங்கித்தானே ஆகணும்" என்று விட்டு விட்டேன். என் நேரம், நான் எட்டாவது வரும்போது கருணாநிதி பனிரெண்டாம் வகுப்பு வரை இலவச பாஸ் என்று சொல்லி விட்டார். எப்போதும் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதாவது தனித்துத் தெரிய வேண்டும் என்று சொல்லுவார். அது நல்ல விதமாக இருக்க வேண்டும், பைத்தியகாரத்தனமாக அல்ல. ஏனென்றால் என்னை அங்கெ சேர்த்த வேண்டாம் என்று எல்லோரும் சொன்னார்கள். "ஊர்ல எல்லாப் பசங்களும் இங்கதான் போறாங்க. அவங்களோட ஒண்ணா போயிட்டு வரலாம், அத விட்டுட்டு, இப்படி தனியா போவனுமா" என்றார்கள். 

தேர்வுகளில் மிக கடினமான கேள்விகள், யாரும் பொதுவாக எழுதாத கேள்விகளையே எழுத சொல்லுவார். ஆசிரியர்கள் எல்லாம் திட்டுவார்கள். "நல்ல கையெழுத்து. அதனால் எல்லோரும் எழுதுற கேள்விக்கு பதில் எழுதுனா, ஒரு ரெண்டு வரி மட்டும் படிச்சிட்டு மார்க் போட்டுடுவாங்க. வேற கேள்வி எழுதுனா, அத படிச்சு, தப்பு எதுவும் இருந்தா மார்க் கொறஞ்சு போயிரும்" என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். என் அம்மாவோ, "மார்க் எல்லாம் வரும். நீ எழுது" என்பார். அதை விட முக்கியமாக அவர் சதவிகிதத்தை (percentage) விட சதமானமே (percentile) முக்கியம் என்றார். அதாவது, நான் 10 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதினால் போதும், ஆனால், அந்த 10 மதிப்பெண்களை முழுதாக வாங்க வேண்டும். எனவே, தெரியவில்லை என்றல் ஏனோ தானோ என்றெல்லாம் எதையும் எழுதாதே, ஒழுங்காக தெரிந்ததை மட்டும் எழுது என்றுதான் சொல்வார்.

எனக்கு கணக்கு பிடிக்கும். அதற்கு அவர்தான் தூண்டுகோல். சிறு வயதில் ஊரில் உள்ள வயதான கிழவிகளிடம் கதைப்பாட்டு பாடச் சொல்லி என்னை விளக்கம் கேட்பார். "மேல கொஞ்சம் குருவி, கீழ கொஞ்சம் கதிரு, கதிரொக்குரு குருவி ஒக்காந்தா, ஒரு குருவிக்கு எடம் இல்ல. கதிருக்கு ரெண்டு குருவி ஒக்காந்தா, ஒரு கதிரு மிச்சம்" என்பது ஒரு புதிர். இது என்னிடம் கேட்கப்பட்டபோது நான் மூன்றாம் வகுப்பு படித்தேன். (இப்போதெல்லாம் இதை மூன்று வயதிலேயே சொல்லி விடுகிறார்கள்). அது மட்டுமில்லாமல், நான் புத்தகம் படிப்பதை அவர் தடுக்கவில்லை.

பத்தாம் வகுப்பு வந்தவுடன், கொஞ்சம் பயத்தில் "நல்லா படிக்கணும், இதுல விட்டா அவ்வளவுதான். எப்படியாவது ஸ்கூல் பர்ஸ்ட் வந்துடு, காசு கொடுத்து தினத்தந்தில வர வச்சுறலாம்" என்றெல்லாம் சொன்னார். நான் அவருக்கு அந்த செலவை வைக்கவில்லை. பத்தாம் வகுப்பிற்குப் பின், அவர் எல்லாமே என்னையே முடிவு எடுக்க சொல்லி விட்டார். அதன் பின், இன்று வரை, வீட்டில் எது செய்தாலும், என்னைக் கேட்டு விட்டுதான் செய்வார். நான் அவரைக் கேட்காமல் செய்தாலும் என்னை எதுவும் அவர் கேட்பதில்லை.

கல்லூரியில் சேர்ந்தால் பணம் அதிகம் தேவைப்படும் என்று சிங்கப்பூரில் தெரிந்த வீட்டிற்கு வேலைக்காக சென்றார். உண்மையில் நான் அப்போது வருத்தப்படவே இல்லை. "அப்பா, இனி நம்மள படி படின்னு தொந்தரவு செய்ய மாட்டாங்க" என்றுதான் எண்ணினேன். அங்கே அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று பின்னால் உணர்ந்தேன். ஊரில், எப்போதும் அரட்டை அடித்துக்கொண்டு சுற்றிலும் தெரிந்தவர்களோடு இருந்து விட்டு, திடீரென யாரோ ஒருவர் வீட்டில், தனியாக, எங்கேயும் வெளியே போகாமல் இருக்கும் கஷ்டம் எனக்கும் சென்னை வரும்போதுதான் புரிந்தது.

அவரது திட்டமிடல் தெளிவாக இருக்கும். என்னிடம் அவர் சொன்னது "நீ காலேஜ் முடிக்கிற நாலு வருஷத்துக்கும் உனக்கு என்னென தேவையோ எல்லாமே வந்துடும். அதுக்கப்புறம் நீ சம்பாதிச்சு எங்களுக்கு கொடுக்கணும்னு அவசியம் இல்ல. உன்ன நீ பாத்துக்கிற மாதிரி இருந்துக்கோ" என்றார். இன்று வரை என்னுடைய சம்பளத்தை எதிர் பார்த்து அவர் இல்லை. தேவையில்லாமல் எதுவுமே வாங்கவில்லை. வீட்டில் டிவியே நான் வேலைக்கு போக ஆரம்பித்த பின்தான் வாங்கினோம். அதுவரை வீட்டில் சைக்கிள் கூட இல்லை. என் தாத்தாவின் பழைய சைக்கிள்தான்.

நான் சம்பாதிக்க ஆரம்பித்து கொஞ்சம் கன்னாபின்னாவென்று செலவு செய்ய ஆரம்பித்தவுடனே (புது அலை பேசி, மடிக்கணினி, ஐ-பாட்) உஷாராகி, மாதா மாதம் என்னிடம் இருந்த பணம் வாங்கி என் திருமணத்திற்கு தங்கம் வாங்கினார். அவரே சேமிக்கவும் ஆரம்பித்தார். அவருடைய ஆசை என்னவென்றால் எப்போதும் கடன் மட்டும் இருக்கக்கூடாது. எனவேதான் எதுவாக இருந்தாலும் முடிந்தவரை அது தேவையா என பார்த்து வாங்க வேண்டும் என்பார். அதனால்தான் கார் கூட வேண்டாம் என்றார். இந்த வீட்டுக் கடனைக் கூட எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசை. இன்னும் கூட அவருக்கு என் சம்பளம் எவ்வளவு என தெரியாது, ஆனால் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கினேன், எப்படி கட்டிக்கொண்டு இருக்கிறேன், வங்கி வீட்டுக்கடனில் எவ்வளவு மீதி உள்ளது என்பது மட்டும் விசாரித்துக் கொண்டே இருப்பார்.

இதுவரை அவர் என்னிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று எதுவுமே கேட்டதில்லை. எனக்கு முதல் மாத சம்பளம் மட்டும் கையில் பணமாக கொடுத்தார்கள். அதை அப்படியே கொடுத்து விட்டேன். அதன் பின் ஒரு முறை ஆனந்த அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று ஒரு புடவை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன். "என்கிட்டே காசு கொடு, எனக்கு என்ன வேணுமோ நான் எடுத்துக்கிறேன்" என்று அதிர்ச்சி அளித்தார். (இதே போல, இன்னும் கேவலமாக என் மனைவியிடமும் திட்டு வாங்கினேன்.அது வேறு கதை).

அவருக்கு சிறு வயதில் இருந்தே புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசை என நான் நினைக்கிறேன். எந்தக் கல்யாணத்திற்கு போனாலும் என்னை அப்படியாவது, முடிந்தவரு அங்குள்ள தெரிந்த செல்வாக்கான சொந்தக்காரர் யாரையாவது பிடித்து என்னை ஒரு புகைப்படமாவது எடுக்க எடுக்க வைத்து விடுவார். அப்படியாகவே என்னுடைய ஓரிரு சிறு வயது படங்கள் வீட்டில் உள்ளன. சம்பாதிக்க ஆரம்பித்த உடனே அவர் வாங்க வேண்டும் என்று என்னிடம் சொன்ன ஒரே விஷயம் கேமராதான். இப்போதும் கூட என் மகள் என்ன செய்தாலும் உடனே என்னை புகைப்படம் எடுக்க சொல்லுவார். ஆனால் அவர் இதுவரை ஒரு புகைப்படமும் எடுத்ததில்லை. நான் கேமரா கொடுத்தபோது கூட "எனக்கெதுக்கு, நீ எடு" என்றார்.

அவருடன் போனில் பேசுவது வாரம் ஒரு முறைதான். அவரும் தேவை இல்லாமல் எல்லாம் பேசவும் மாட்டார். கல்லூரிக் காலங்களில், வெளியில் பூத்தில் இருந்து போன் செய்ய வேண்டும், அதுவும் ஊரில் போன் கிடையாது. பக்கத்துக்கு வீட்டிற்கு போன் செய்து, சென்று கூட்டி வர வேண்டும். எனவே, தேவை இல்லாமல் போன் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அது இன்று வரை தொடர்கிறது.

நண்பர்கள் அனைவரும் "ம் சாப்டுட்டேன், ஆபிஸ் கெளம்பறேன். வந்துட்டேன், தூங்கப் போறேன், சரிம்மா, பாத்துகிறேம்மா" என்றெல்லாம் பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். திருமணம் நிச்சயம் ஆனவுடன், "ஏண்டா, ஆளுக்கு உன் ஆளுக்கு மட்டும் அர மணி நேரத்துக்கு ஒரு வாட்டி அப்டேட் கொடுப்ப. உங்க அம்மாகிட்ட வாரத்துக்கு ஒரு வாட்டி, ரெண்டு நிமிஷம் மட்டும் பேசுவியா" என்பார்கள். என் அம்மாவிற்கும் அது தெரியும். ஆனால், நானோ, என் அம்மாவோ இதுவரை அதைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. ஆனால், சென்னைக்கோ அல்லது தூரமாக வேறு எங்கு சென்றாலும், சென்றவுடன் மட்டும் "நான் வந்து சேந்துட்டேன்" என்று மட்டும் சொல்லி விட வேண்டும். அது கல்லூரி முதல் இன்று வரை தொடர்கிறது.

இந்தப் பதிவு கூட அன்னையர் தினத்திற்காக இல்லை. இதே வாரம் வந்த என் அம்மாவின் (சான்றிதழில் உள்ள) பிறந்த நாளிற்காக. அவருக்கும் உண்மையான பிறந்த நாள் தெரியாது. எனவேதான் எனக்கு தேதி எல்லாம் மாத்தி எழுத வேண்டாம். சரியான தேதியே சான்றிதழ் எல்லாவற்றிலும் இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்.

என் அத்தையைப் பற்றி பதிவு போட்ட பின், அம்மா பற்றி சொல்ல வேண்டும் அல்லவா? அதுதான் இந்தப் பதிவு. இன்னும் கூட நான் இப்படி பதிவெல்லாம் எழுதுகிறேன், அதையும் கூட சில பேர் படிக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது. எனக்கே அவரிடம் சொல்ல வெட்கமாக உள்ளது. அதில் இன்னும் அவரைப் பற்றியும் எழுதியுள்ளேன் என்று அவரிடம் சொன்னால் அவர் இன்னும் எவ்வளவு வெட்கப்படுவாரோ தெரியவில்லை.

6 comments:

 1. அம்மாவைப் பற்றிச் சொன்னாலென்ன
  அப்பாவைப் பற்றிச் சொன்னாலென்ன
  என்னைப் பற்றிச் சொன்னாலென்ன
  உன்னைப் பற்றிச் சொன்னாலென்ன
  எவரைப் பற்றிச் சொன்னாலென்ன
  சொல்லும் வேளை சொல்லுகின்ற
  நல்ல செய்திக்காகவே
  வாசகன் ஓடோடி வந்து
  விழுந்து விழுந்து படிக்கின்றான்!
  அறிஞரே! அச்சமின்றி எழுதுங்கள்
  தாயன்பு கலந்து பிசைந்து எழுதிய
  தங்கள் பதிவைப் பாராட்டுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.. ஆனாலும், அறிஞர்னு சொன்னது, போங்க சார், எனக்கு வெக்கம் வெக்கமா வருது.

   Delete
 2. அக்கறையான கண்காணிப்பு சிறப்பு...

  ReplyDelete
 3. உண்மையிலேயே உங்களுக்கு இருப்பது மிக அருமையான அம்மா. அவரை இன்னும் புரிந்துகொள்ள முயற்சி செய்யவும். பல அம்மாக்கள் இப்படி இருப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. அம்மாக்களை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடியுமா? தனது தேவையை வெளியில் சொல்லாமல் இருப்பவர்கள்தானே அவர்கள்.

   Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..