Monday, November 23, 2015

கமல் ரசிகனுக்குப் பிடித்த ரஜினி படங்கள்

'தலைப்பே உங்களுக்கு எல்லாம் விளக்கி விடும் என்பதால், நேரே விஷயத்திற்கு போய் விடுவோம். இன்னும் யாருக்காவது சந்தேகம் இருந்தால் கமல் பற்றிய பதிவுகளையும், ரஜினி படங்கள் (எந்திரன், லிங்கா) பற்றிய விமர்சனங்களையும் வேண்டுமானால் படித்து விடுங்கள் (விளம்பரம்!).

அது ஏனென்று தெரியவில்லை, சிறு வயதில் இருந்தே எனக்கு கமல்தான் பிடிக்கும். ஒரு வேளை எல்லோரும் ரஜினி பிடிக்கும் என்று சொன்னதால் எனக்கு கமல் பிடிக்க ஆரம்பித்ததா, இல்லை, ரஜினி போல என்னால் தலை முடி கோத முடியவில்லையே என்ற கோபத்தில் கமல் ரசிகன் ஆனேனா என எனக்கே தெரியவில்லை.

கல்லூரி வரும்வரை, எனக்கு ரஜினி பிடிக்காது என்றெல்லாம் கிடையாது. ரஜினியா கமலா என்றால், கமல் அவ்வளவுதான். கல்லூரிக் காலங்களில்தான் நண்பர்களிடம் ஆரம்பித்த விவாதங்கள், சரி அத விடுங்க. குறிப்பாக ஒரு முக்கிய விஷயம். இது எனக்குப் பிடித்த படங்களில் பட்டியல். அந்தப் படம் எங்கே, இது எங்கே என்றெல்லாம் கேட்க வேண்டாம். அது மட்டும் இல்லாமல் இந்தப் படங்கள் அனைத்தும், ரஜினிக்காக மட்டும் எனக்கு பிடித்தவை. உதாரணமாக, எனக்கு தளபதி மிகவும் பிடிக்கும். இதில் தளபதி இல்லை, ஏனென்றால் ரஜினியை விட இளையராஜாவிற்காகவே அந்த படம் எனக்கு பிடிக்கும்.

ராஜாதி ராஜா:



1970களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் பிறந்த யாராக இருந்தாலும் சரி, சிறு வயதில் இந்தப் படத்தை ரசிக்காமல் இருந்திருக்கவே முடியாது. அது யாருடைய ரசிகராக இருந்தாலும் சரி. (போக்கிரி ராஜாவின் தழுவலாக இருந்தாலும்). அதிலும் குறிப்பாக "ஒரு மொட்ட, ஒரு மீச, நாலு ஸ்கூல் பசங்க, அதுக்கு ஒரு தலைவன்" இந்த ஒரு வசனத்தைக் கேட்டாலே எனக்கு பழைய நினைவுகள் வந்து விடும். என்னுடைய சிறு வயது நினைவுகளை கொண்டு வருவாதேலேயே எனக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும்.

இதே போல மனிதன், ராஜா சின்ன ரோஜா, வேலைக்காரன், குரு சிஷ்யன் போன்ற படங்கள். ம்ம், அது ஒரு அழகிய நிலாக்காலம். அந்த நிலாக்காலம் பற்றி தனியாக சொல்கிறேன். கமல் படங்களில் எனக்கு அபூர்வ சகோதரர்கள் மட்டுமே அப்படி நினைவில் உள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.

"என்னப்பா கொழப்பற, இந்த லாஜிக்படி பாத்தா நீ ரஜினி ரசிகனாத்தான இருக்கணும்" என்கிறீர்களா? பத்து வருடங்களுக்கு முன்புதான் நாங்கள் தொலைகாட்சி வாங்கினோம். அதற்கு முன் பக்கத்துக்கு வீட்டில் போய்தான் பார்க்க வேண்டும். 90களின் ஆரம்பத்தில் வெள்ளி இரவு 9 மணிக்கு தமிழ்ப்படம் போடுவார்கள். ஏதாவது ஒரு நாள் திடீரென ஹிந்தி படம் போட்டு விடுவார்கள்

என் அம்மா எனக்கு நினைவு தெரிந்து டிவியில் எதுவுமே பார்க்க மாட்டார்கள். இப்போது கதை வேறு. அப்படிப்பட்ட அவரே, 'மூன்றாம் பிறை' படம் டிவியில் போட்டபோது இரவு வந்து பார்த்தார்கள். அதிலும் அந்த வாரம் அதன் ஹிந்தி பதிப்பு (சத்மா) தான் திரையிடப்பட்டது. ஆனாலும், அது முழுதும் பார்த்தார்கள். ஆனாலும் வேறு எந்த கமல் படமும் அவர் பார்த்ததில்லை. ஆனால், எனக்கென்னவோ அப்போதுதான் கமல் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

தம்பிக்கு எந்த ஊரு:



பொதுவாக ரஜினியின் காமெடி படங்களில் எல்லோருக்கும் முதலில் சொல்லும் படம் தில்லு முல்லு. என்றாலும், எனக்கு அதையும் தாண்டி பிடித்த படம் இதுதான். படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நொண்டி அடித்துக்கொண்டே போவார். அப்போது ஆரம்பிக்கும் அந்தக் குறும்பு படம் முழுதுமே பரவி இருக்கும். கதிர் அறுப்பது, மாடு கழுவுவது, பால் கறப்பது, கூழ் சாப்பிடுவது என தூள் பறக்கும். ஆரம்பக்காட்சிகளில் பணத்தை தண்ணீராக செலவு செய்வார். பிற்பாடு, செந்தாமரை ரஜினிக்கு அவர் செய்த வேலைக்கு சம்பளம் கொடுப்பார். ரஜினி அந்தப் பணத்தை நெகிழ்ச்சியோடு பார்ப்பார். "என்னப்பா, இதுக்கு முன்னாடி பணத்தையே பாத்ததில்லையா" என்று கேட்டதற்கு ரஜினி "இந்த மாதிரி பணத்தை நான் இப்பத்தான் பாக்கறேன்" என்பார். நான் முதன் முதலில் சம்பளம் வாங்கியபோது எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது.

புதுக்கவிதை:



பொதுவாக ரஜினி மிக இயல்பாக நடித்தது என ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களைத்தான் சொல்லுவார்கள். ஆனால், எனக்கு இந்தப் படம்தான் பிடிக்கும். அதே போல விதவை மறுமணம் பற்றிய படங்களில் நாயகி கன்னி கழியாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் இதில் அப்படி எல்லாம் இல்லை (கணவர் ஒரு வாரம் கழித்து இறந்ததாக நாயகி சொல்வார்). அதே போல ரஜினி, சரிதா ஜோடியின் எதிர்பாராத திருப்பம் நன்றாக இருக்கும். ரஜினி கொஞ்சம் கூட ஒப்பனை போடாமல் நடித்த படம் என நினைக்கிறேன். படத்திலேயே அவரை கருப்பன் என சொல்வார்கள்.

நெற்றிக்கண்:



ரஜினியே நாயகனாகவும், வில்லனாகவும் நடித்த படங்கள் இரண்டுதான். அதில் எந்திரன் தான் எல்லோரும் முதலில் சொல்வார்கள். ஆனால், எனக்கு நெற்றிக்கண் தான் முதலில். எனக்கு தெரிந்து ரஜினி கல்லூரி மாணவனாக நடித்த ஒரே படம் இதுதான் என நினைக்கிறேன். மகன் ரஜினியிடம் ஒவ்வொரு முறையும் அவர் காட்டும் இயலாமை நடிப்பு, நக்கலாக 'ம்ஹும்' என்று ஒவ்வொரு முறையும் சொல்லி கையில் 'நன்றி' என்று எழுதியதைக் காட்டும் இடமும் அட்டகாசம். எந்திரன் எனக்கு பிடிக்க காரணம் ரஹ்மான், சிட்டி ரஜினி. இதில் ராஜாவும் அட்டகாசமான இசையைக் கொடுத்திருந்தாலும், அது கூடுதல் பலமே. ரஜினிக்காகவே கண்டிப்பாக படம் எனக்குப் பிடித்தது.

கழுகு:



கமல்தான் நடக்கப் போவதை முன் கூட்டியே படங்களில் காண்பிப்பார் என்பார்கள். ஆனால், ரஜினி அதற்கு முன்னரே போலி சாமியார்கள் பற்றி இந்தப் படத்தில் சொல்லி இருப்பார். ஏழாம் அறிவு படத்தில் வரும் 'நோக்கு வர்மம்' எல்லாம் முன்னரே இந்தப் படத்தில் வந்து விட்டது. அதே போல ஒரு சொகுசு பேருந்து என்றால் என்ன என்பது இந்தப் படத்தின் மூலம்தான் எனக்கு தெரியும். ஒரு அருமையான மர்ம திரைப்படம். ஆரம்பக் காட்சிகள் சற்றே இழுவையாக இருந்தாலும் போக போக அட்டகாசமாக இருக்கும்.

இவை தவிர இன்னும் நிறைய ரஜினி படங்கள் எனக்கு பிடித்தாலும், இவையே எனது பட்டியலில் முதலில் இருப்பவை.

2 comments:

  1. என்னுடைய புரிதல் என்னனா..கமலுக்கும் ரஜினிக்கும் 50:50 சதவீதம் ரசிகர்கள்தான் இருக்காங்க..இந்த 50 சதத்தில் பாமாரனில் இருந்து மேதாவி வரை இருக்காங்க. ரெண்டு பக்கத்து 50 லயும்தான். அப்படியிருக்கும்போது ஏன் ரஜினி படங்களுக்கு பாக்ஸ் ஆஃபிஸில் வரவேற்பு அதிகம் இருக்கிறது?
    இங்கேதான் நீங்க கவனமா இருக்கணும் கமலுக்கு ரஜினி அளவுக்கு ஏன் மேலேயே வெற்றிப்படங்கள் உண்டு. ஆனால் ஒரு படம் ஃப்ளாபாகும்போது எவ்வளவு ரெக்கவர் பண்ண முடியுது? சுமாரான படம் எவ்வளவு ரெக்கவர் பண்ணுதுனு பார்த்தால் ரஜினி அஹெடாக இருக்கார். இப்போ லிங்கா ஃப்ளாப். பிச்சை எடுக்கிறேன்னெல்லாம் ட்ராமா பண்ணினாங்க. விநியோகஸ்தர்களுக்கு லாஸ்னு சொன்னாங்க. அப்படி இருந்தும் அடுத்த படம் கபாலி விற்பனை ரொம்ப பாதிக்காது. இது இப்போ இல்லை அந்தக்காலத்தில் இருந்து இப்படித்தான். இதுக்கு ரஜினி ரசிகர்கள் காரணமல்ல! கமல் ரசிகர்களும் பொது மக்களும்தான். அதாவது கமல் படங்களை சுத்தமாக தவிர்க்கிற ரஜினி விசிறிகள் அதிகம். ஆனால் ரஜினி படத்தை கேலிபண்ணனும்னோ இல்லைனா ரஜினிமேலே உள்ள ஏதோ ஈர்ப்புனாலேயோ ரஜினிபடங்களையும் தவராமல்ப் பார்க்கிற கமல் விசிறிகள் அதிகம்னு நினைக்கிறேன். நீங்களும் சுமாரா அந்த வகைதான்.

    ஏன் கமல் படங்களை ரஜினி விசிறிகள் தவிர்க்கிறாங்க? இதுக்கு காரணம் என்னனு தெரியவில்லை..

    மேலும் ரஜினிகாந்தை ஒரு நடிகனாகவே ஏற்றுக்கொள்ளாத கமல் ரசிகர்கள் எல்லாம் உண்டு. பதிவுலகிலேயே சிலர் உண்டு. இவர்கள் மிக மிக குறைவான விழுக்காடுகள். பொதுவாக கமல் விசிறிகள் உங்களைப் போல ரஜினியை சகிச்சுக்கிறாங்க. ஆனால் ரஜினி விசிறிகள்ல எத்தனை பேரு இப்போ வருகிற கமல் படங்கள் தியேட்டர்ல போயிப் பார்க்கிறாங்கனு பார்த்தீங்கனா அது ரொம்ப குறைவான விழுக்காடுனு நினைக்கிறேன். ஏன் என்றால் ரஜினி ரசிகர்கள் கலைத் தொண்டு அது எதுனு அலட்டிக்கொள்வதில்லை. They like to watch entertaining movies.They dont find latest Kamal movies as entertaining I think! It is just my theory. :)

    ReplyDelete
    Replies
    1. \\கமல் படங்களை சுத்தமாக தவிர்க்கிற ரஜினி விசிறிகள் அதிகம்.\\
      நீங்கள் சொல்வதிலும் உண்மை உள்ளது. 20 வருடங்களுக்கு முன், இன்னும் குறிப்பாக சொன்னால், நாயகன் படத்திற்கு முன்பு வரை, கமலும் ஒரு மசாலா பட நாயகனாகத்தான் இருந்தார். தில்லு முல்லு, சலங்கை ஒலி போன்ற படங்களுக்கு மீசையை கூட எடுக்க மாட்டேன் என்று சொன்னார் என்பார்கள். அந்த நேரங்களில் இருவரும் சரி சமமாக இருந்தனர்.

      \\ஏன் கமல் படங்களை ரஜினி விசிறிகள் தவிர்க்கிறாங்க? இதுக்கு காரணம் என்னனு தெரியவில்லை..\\
      பின் கமல் வித்தியாசமான (?) படங்கள் எடுக்க ஆரம்பித்ததும், "அது கமல் படம்டா, புரியாது" என அவர் ரசிகர்களுக்கு மட்டும் என மாறி விட்டது. அதனாலேயே கமலுக்கு முதல் நாள் வசூல் சாதாரணமாகவே இருக்கும். படம் நன்றாக இருந்தால், போக போக வெற்றி அடையும் (பாபநாசம் போல). ஆனால், ரஜினி தன்னுடைய பாணியை மாற்றவே இல்லை. அது தவிர 'தேவையை உருவாக்குவது எப்படி' (creating demand) என்பது ரஜினிக்கு கை வந்த கலை. இதைப்பற்றி தனியாக ஒரு போடலாம் என உள்ளேன்.

      \\ரஜினி படத்தை கேலிபண்ணனும்னோ இல்லைனா ரஜினிமேலே உள்ள ஏதோ ஈர்ப்புனாலேயோ ரஜினிபடங்களையும் தவராமல்ப் பார்க்கிற கமல் விசிறிகள் அதிகம்னு நினைக்கிறேன்.\\
      \\ஏன் என்றால் ரஜினி ரசிகர்கள் கலைத் தொண்டு அது எதுனு அலட்டிக்கொள்வதில்லை. \\
      உண்மை. ரஜினி படங்கள் என்றால் மூன்று மணி நேர பொழுதுபோக்கு. அதுதான் முக்கியம்.

      என்னுடைய கணிப்பு, கமல் மட்டும் தன்னுடைய கலையார்வத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நடிகராக மட்டும் இருந்தால் (அல்லது இருந்திருந்தால்), இந்நேரம் வேறு மாதிரி இருந்திருக்கலாம். இன்னும் குறிப்பாக சொன்னால், கமல் நடிகராக மட்டும் (கதை, திரைக்கதை, வசனம் எதிலும் மூக்கை அதிகமாக நுழைக்காமல்) இருந்த படங்கள் அனைத்துமே வெற்றி அடைந்தவை. பாபநாசம், வேட்டையாடு விளையாடு, வசூல் ராஜா, பம்மல் K சம்பந்தம், தெனாலி, இந்தியன் போன்றவை. இது பற்றி தனியாக வேண்டுமானால் என்னுடைய கருத்துகளை வைத்து ஒரு பதிவு போடுகிறேன்.

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..