Sunday, April 14, 2019

தேர்தல் களவரம்!

இதோ, அடுத்த திருவிழா ஆரம்பித்து விட்டது. இதில் நாம் வழக்கம் போல பெரிய ஆர்வம் காட்ட மாட்டோம். ஏனென்றால், நமக்கு இதில் பெரிய பலன் இருக்காது. எப்படி என்று கேட்கிறீர்களா? ஒவ்வொன்றாக பார்ப்போம். யார் வென்றாலும், ஆட்சி அமைத்தாலும் சரி, நம்மூரில் வெல்பவர்கள் எதிரணியாகவே இருப்பார்கள், 

அது மட்டுமில்லாமல், எப்படி இருந்தாலும், நாம் தமிழர்கள், அவர்கள் வட நாட்டவர்கள். காவிரியாக இருந்தாலும், முல்லை பெரியாறாக இருந்தாலும், நமக்கு எதிராகவே செயல்படுவார்கள். காலம் காலமாக நடப்பதுதான். 

அனைத்து சமூக வலைத்தளங்களிலும் 50 ஆண்டுகால திராவிடத்தால் வீழ்ந்தோம், இல்லை இல்லை வாழ்ந்தோம் என்று மோதிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வாழ்ந்தோமா இல்லையா என்பதை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சொல்கிறேன். 

இன்னொன்று, நான் வெளிமாநிலங்களில் ஒரே ஒரு வருடம், அதுவும் மைசூரில் வேலை பார்த்தேன். ஒரு சில மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன், அவ்வளவே. மற்றபடி எல்லாமே ஏட்டறிவே. திராவிட புரட்சியாளர்களைப் பாருங்களேன், நீட் தேர்வு, எய்ம்ஸ் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் தமிழகம் எப்படியெல்லாம் முன்னேறியுள்ளது என்று பேசுவார்கள், ஆனால் டெங்கு வரும்போது தமிழகம் மருத்துவத்துறையில் பயங்கரமாக பின் தங்கியுள்ளது என்பார்கள். இவர்களுக்கு இதே வேலைதான். சரி விடுங்கள். 

புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால், தமிழகம் மற்ற மாநிலங்களை விட எவ்வளவோ பரவாயில்லை. அதற்காக முதலிடம் என்றும் சொல்ல முடியாது. முதல் 5 இடங்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். இவை எல்லாவற்றிக்கும் காரணம், அடித்தளம் என்பது இரண்டு பேர்தான். காமராஜர், பெரியார். 

கிராமப்புறங்களில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில், குறைந்தபட்சம் எழுதப்படிக்க தெரிந்தவர்களிடம் கேளுங்கள், காமராஜர் பற்றி சொல்வார்கள், அதே போல பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் பெரியார். பெரியார் என்னத்தைக் கிழித்தார், மகளைக் கல்யாணம் செய்தார் என்று பேசுவோர் எல்லாம் கூறுபவர்களைப் பார்த்தால் சிரிப்பாக வரும். அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல என்பதை அவரே சொல்லி இருக்கிறார். அவரைப்பற்றி பிறகு தனிப்பதிவில் பார்ப்போம். 

காமராஜர் திராவிட கட்சி இல்லையே, பெரியார் அரசியல்வாதி இல்லையே என்பவர்களுக்கு, உண்மைதான். அடித்தளமிட்டவர்கள் இவர்கள்தான். ஒரு வேளை சோறு கிடைக்குமே என்று பள்ளிக்கு சென்றவர்கள், இன்று இருக்கும் நிலைமையே வேறு. இவர்கள் போட்ட சாலையை அகலப்படுத்தியது கருணாநிதிதான்

ஆனால், ஒரு கட்டத்தில் ருசி கண்ட பூனையாக மாறி விட்டார்கள். எம்ஜிஆர் வருவதற்கு முன் தனியார் கல்லூரிகள் குறைவு. அவர் அனுமதி கொடுத்த பிறகு, எப்படி பணம் பார்ப்பது என்பதைக் கண்டு பிடித்த பிறகு தடம் மாறியது. அடுத்தடுத்த ஆட்சிக்காலங்களில் இன்னும் மோசமாக மாறி விட்டது. நம் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக 'நமக்கென்ன வந்தது' மனநிலைக்கு வந்து விட்டார்கள். 

இவ்வளவு ஏன், முருகதாஸ் கூட கண்டிப்பாக அரசுப்பள்ளியில், அரசு கொடுத்த இலவச பஸ் பாஸ் வசதியைக் கூட பயன்படுத்தி இருக்கலாம். இப்போது இலவசங்கள் வேண்டாம் என்கிறார். மனிதன் ஒரு நிலையில் இருந்து கொஞ்சம் மேலே போன பிறகு, கீழே இருப்பவர்களைப் பார்த்தால் இளக்காரமாகாத்தான் இருக்கும். இன்னொன்று, நாம் எப்போது கடைசியாக உபயோகித்தோமோ, அதே நிலைமையிலேயே இன்னும் இருக்கும் என்று நினைக்கிறோம். இதுதான் சாதாரண மனிதனுக்கான பிரச்சினை. 

சரி விடுங்கள். யாருக்கு வாக்களிக்கலாம் என்று முன்பே ஒரு முறை எழுதியுள்ளேன். அதேதான் இப்போதும். "அப்ப நீ சொன்ன மக்கள் நல கூட்டணி என்னாச்சு பாத்தல்ல" என்பவர்களுக்கு, உண்மைதான். அது ஒரு உப்புமா கூட்டணி என்பது தெரிந்ததுதான். மாற்று சக்தி என்பதே நமக்கு இல்லை. 

உப்புமா என்றவுடன்தான் இப்போது உலாவும் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.உப்புமா வேண்டாம் என்று எல்லோரும் வேறு வேறு உணவுகளுக்கு மக்கள் வாக்களிக்க, கடைசியில் உப்புமாவே வெல்கிறதாம். மற்ற மாநிலங்களில் எப்படியோ, நம்மூர் மக்கள் வித்தியாசமானவர்கள். பார்ப்போம். 

மீண்டும் சொல்கிறேன். மாற்றம் ஒரே நாளில் நிகழாது. 

2 comments:

  1. நல்லதொரு மற்றம் வந்தால் சரி தான்...

    // Labels: அரசியல், அனுபவம், கமல் // ஓஹோ...!

    ReplyDelete
    Replies
    1. அண்ணா வணக்கம். நான் நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தேன். பல வேலைகள். எனவே ஓரளவு எழுதியவுடன் பதிவிட்டு விட்டேன். ஒரு வருடம் முன்பே கமல் பற்றியும் எழுதி உள்ளேன்.

      https://sivigai.blogspot.com/2018/04/blog-post.html

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..