Saturday, July 7, 2012

இசை @ இளையராஜா

நான் ஏற்கனவே சொன்னது போல, ஆன்-சைட்டில் நிறைய படம் பார்க்க வேண்டும். அல்லது YouTubeல் ஏதாவது (நல்ல) நகைச்சுவைக் காட்சிகள், பாடல்களைப் பார்க்க வேண்டும். அப்படி தேடும் போதுதான் கீழ்க்கண்ட பாடல்களை காண நேர்ந்தது. இவை அனைத்தும் என்னிடம் உள்ளன என்றாலும், அவ்வளவாக கேட்க வேண்டுமென்று தோன்றியதில்லை. உண்மையிலே மிக அருமையான இசை. சிலவற்றை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் இன்னும் அருமையாக இருக்கும். ஏனென்று தனியாக சொல்ல வேண்டியதில்லை.

நான் பார்த்த படங்களைப் பற்றி இன்னொரு பதிவு போட்டு கொல்கிறேன். ஓ, சொல்கிறேன்.

ஜானகி கலகனலேது (ராஜ்குமார் - தெலுங்கு):

தயவு செய்து கண்ணை மூடிக்கொண்டு பாடலை மட்டும் ரசிக்கவும். பார்த்து விட்டு ஏதாவது பிரச்சினை என்றால், நான் பொறுப்பாக மாட்டேன். மிக மிக அருமையான பாடல். நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல். என்னுடன் உள்ள தெலுங்கு நண்பன் கிட்டத்தட்ட ஐம்பது முறைக்கும் மேல் கேட்டுக்கொண்டே இருந்தான். ஒரு சின்ன சந்தேகத்தில், இளையராஜா? என்றேன். ஆமா ஆமா ஆமா என்றான். இப்போது நானும் அவனுக்கு போட்டியாக கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த பாடல் தமிழில் வந்துள்ளதா? யாராவது விளக்க வேண்டும். பாடல் வரிகளும் மிக அருமையாக, புது மணத்தம்பதியர் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டதாக சொன்னான். என்னவோ, இளையராஜாவுக்கு மொழி கிடையாது.



புன்னகையில் மின்சாரம் (பரதன் - தமிழ்):

உண்மையிலே இந்தப் பாடலை படமாக்கியிருக்கும் விதம் அருமையாக இருக்கும். பின்னணியில் வெள்ளை மட்டும். அட்டகாசமான, துள்ளலான இசை. ஒரே ஒரு உறுத்தல்தான். எப்படி சொல்ல. சரி விடுங்க. கடைசி ஒரு நிமிடம் மட்டும் வேண்டுமானால் கண்ணை மூடிக்கொள்ளலாம்.


அப்புனே தீயேனே (ஜகதீக வீருடு அதிலோக சுந்தரி - தெலுங்கு):

இந்த பாடல் தமிழில் வந்துள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், ஹிந்தியில் வந்துள்ளது. சுட்ட பழம். தெலுங்கு சிவாஜியில் ரஜினி ஸ்ரேயாவுடன் இந்த பாடலுக்குத்தான் ஆட்டம் போட்டிருப்பார். அருமை. வேறென்ன சொல்ல.


சுட்ட படம் (பேட்டா):


ஜோதேயல்லி (கீதா - கன்னடம்):

இதை தமிழில் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். கன்னடத்தில் 'கொலை வெறிப் பாடல்'. எந்தவொரு இன்னிசை நிகழ்ச்சியும் இந்தப் பாடல் இல்லாமல் இருக்காது. எனக்கும் தமிழை விட (விழியிலே மணி விழியிலே - நூறாவது நாள்), ஹிந்தியை விட (ஜானே தோ நா - சீனி கம்) இதுதான் பிடிக்கும்.







முதி முதி (பா - ஹிந்தி):

சீனி கும் படத்திற்குப் பின், பா படத்திற்கும் பழைய பாடல்களையே ராஜா கொடுள்ளார் என்று கேள்விப்பட்டதும், சற்று கஷ்டமாக இருந்தது. ஆனால், இந்த ஒரு பாடல், 'ராஜாடா நான்' என்று சொல்ல வைத்து விட்டது. இதை நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.


சும்மா மக்களை சந்தோசப்படுத்தவே இந்தப் பதிவு. கேட்டு மகிழுங்கள். மீண்டும் சந்திப்போம்.

Wednesday, July 4, 2012

ஆன்-சைட் அமெரிக்கா 2

மக்களே!ஆன்-சைட் வந்த பிறகு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகள் என்னவென்றால், நிறைய படங்களை  Stream செய்து பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். YouTubeல் கன்னா பின்னாவென்று (நல்ல) காட்சிக் கோப்புகளைப் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். "எனக்கு அதிலெல்லாம் அவ்வளவா interest இல்லீங்க" என்பவர்கள், என்னைப் போல பதிவர் ஆக வேண்டும் (சும்மா, தமாசுக்கு). எதுவும் இல்லைஎன்றால், பிடித்து வைத்த பிள்ளையார் என்பார்களே, அது போல ஆக வேண்டும் வீட்டுக்கு வந்து விட்டால்.

மடிக்கணினி என்னிடம் இல்லாத காலம் அது. ஆன்-சைட் போய் விட்டு வந்த ஒரு நண்பனின் கணினியை பயன்படுத்துவேன். அவனோ, அலுவலகத்திலிருந்து திரும்பிய பின், அதை சீண்டவே மாட்டான். கேட்டால், "இத கட்டிக்கிட்டுதான் ஒரு வருஷம் குடும்பம் நடத்துனேன். இங்கேயுமா. வேண்டாண்டா சாமி" என்றான். இப்போது கல்யாணம் ஆகி விட்டது. மடிக்கணிணியே பரவாயில்லை, வேண்டாமென்றால் அமர்த்தி விடலாம். ஆனால், சரி விடுங்க பாஸ்.

இன்னொரு மிக முக்கியமான, முதல் முறை வரும்போது தவிர்க்க முடியாத விஷயம், பணப் பரிமாற்ற விகிதம் (Conversion). எதை எடுத்தாலும், மனம்  உடனே, அதை ஐம்பதால் பெருக்கி, நம்மூரில் அது எந்த விலை என்று பார்த்து, 'வேண்டாம்' என முடிவு செய்து விடும். நான் இது வரை பார்த்த வரை, நம்மூரை விட குறைந்த விலை பார்த்தது பெப்சி போன்ற குளிர் பானங்களில்தான். (இது கொஞ்சம் இல்ல ரொம்பவே அதிகம் என்கிறீர்களா, நான் தினசரி உபயோகம் பற்றி மட்டும் சொன்னேன்)

இன்னொரு கொடூரம், நம்மூரைப் போல, மேலே சூரியனைப் பார்த்து மணி என்னவென்று கணித்தீர்கள் என்றால், காலிதான். இப்போதுதான் கோடைக் காலம். காலை ஐந்தரை மணிக்கே சூரியன் பிரகாசமாக உதித்து விடும். "லேசா இருட்டு கட்டுதே, ஆறரை இருக்கும்" என்று என்னும்போது மணி ஒன்பதரைக்கு மேல் ஆகி இருக்கும். இது அப்படியே தலை கீழாக பனிக்காலத்தில் இருக்கும் என்றனர். முடியலை.

நேர மண்டலம். இங்கு மட்டும் மொத்தம் நான்கு நேர மண்டலங்கள் உள்ளன. சரி, நம்ம நண்பன் ஒருத்தன் அமெரிக்காவில் இருக்கானே, என்று இரவு பத்து மணிக்கு அழைத்தால், அவனோ "டேய், இங்க மணி பனிரெண்டுக்கு மேலாச்சுடா, இது Eastern டா, தூங்க விடுடா" என்று கத்தினான். என்ன கொடுமை சரவணன் இது

இது பற்றி, நமது சக பதிவர் பாலா, விலாவரியாக புட்டு, புட்டு வைத்துள்ளார். அவரது "பிரமச்சாரிகளுக்கு" என்ற பதிவு மிக மிக பிரபலமானது. கல்யாணத்திற்கு முன், வீட்டில், அவர் சொன்னது போலவே, பல பிட்டுகளை போட்டுள்ளேன். சரி விடுங்க. அவரது ஆன்-சைட் பதிவில், கடைசியில் உள்ள பன்ச், "ஆன்சைட்ன்றது பப்ளிக் டாய்லெட் மாதிரி, உள்ள இருக்கறவன் வெளிய வரனும் நெனப்பான், வெளிய இருக்கறவன் உள்ள போகனும் நெனப்பான்." இதை மட்டும், அவரது உத்தரவின்றி பயன்படுத்திக் கொள்கிறேன். மன்னிப்பாராக!

கிளம்புவதற்கு முன், அனைவருமே சொல்வது "என்னால அங்க ரொம்ப நாள் எல்லாம் இருக்க முடியாது. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வந்துடுவேன்" என்பதுதான். சொன்ன அனைவருமே, சென்ற ஒரு வருடம் கழித்து, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, இன்னும் தங்கிக் கொண்டே இருப்பர். பணம். வந்த பிறகு, கையில் புரளும் பணத்தைப் பார்த்தவுடன், "இன்னும் கொஞ்ச நாள், இன்னும் கொஞ்ச நாள்" என்று மனம் அரிக்க ஆரம்பித்து விடும் (இது எனக்கும் பொருந்தும்). குடும்பத்துடன் இங்கு வந்தவர்களோ, (மனைவி, குழந்தை, பார்த்துக்கொள்ள தனது தாய், தந்தை) கொஞ்ச நாள் சமாளிக்க முடியும். பின்? கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் ஒரு வாழக்கை முறையிலும், பின் ஓரிரு வருடங்கள் வேறொரு வாழ்க்கை முறையிலும் வாழ்ந்து விட்டு, இரண்டையும் விட முடியாமல் துன்பப் படுபவர்கள் நிறைய.

பெற்றவர்கள் இருக்கும்போது எங்கேயோ போய் விட்டு, இல்லாத போது "ஐயோ கடைசி நேரத்தில பக்கத்துல இல்லையே" என்று கதற வேண்டியது. உறவினரின் நண்பருக்கு நடந்தது எனக் கேள்விப்பட்ட விஷயம். அவரது அம்மா, அமெரிக்காவில் அவருடன் இருக்கும்போது திடீரென இறந்து விட்டார். ஊருக்கு செல்ல நிறைய பணம் கட்ட வேண்டியிருந்தது. அதைக் கட்டுவதற்குள், உடல் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் உள்ளது, எங்கே எரிக்க வேண்டும் என நிர்ப்பந்தம். வேறு வழியின்றி, அங்கேயே எரித்து விட்டு, அஸ்தியோடு நின்றாராம்.

எனது நண்பன் ஒருவன், அமெரிக்காவில் இருந்தே Skypeல் அவனுடைய நிச்சயதார்த்தத்தை செய்தான். அதை பெருமையாக வேறு பிரபலப்படுத்தினான். இங்கு, குடியுரிமைக்கு காத்திருக்கும் ஒருவரிடம் பேசும்போது சொன்னார். "பணம், சொந்த ஊர்ல பேரு. லீவ்ல ஊருக்கு போனோம்னா, கெடக்கிற மரியாதையே வேற. நாம ஊர்லயே இருந்தோம்னா, அட அவனா, இங்கதான்பா இருக்கான். எப்போ வேணா பாத்துக்கலாம் என்பார்கள்." நாம் எதை இழக்கிறோம் என்பது இழந்த பின்தான் தெரியும். நாம் சந்தோசமாகத்தான் இருந்தோம் என்பது அது இல்லாத போதுதான் உரைக்கும்.

சென்னையில் இருந்து, ஏதாவது என்றால் ஊருக்கு செல்ல, குறைந்த பட்சம் ஏழு மணி நேரமாவது ஆகிறது. அதற்குள் ஏதாவது நடந்து விடுமோ என மனது துடிக்கிறது. என் அம்மா, சென்னையில் இரண்டு நாட்கள் இருந்து விட்டு, "என்ன ஊரடா இது, எப்படித்தான் இருக்கீங்களோ, முடிஞ்சளவு ஊர்ப்பக்கம் ஏதாவது வேலை பாத்து வந்திரு" என்றார். இதற்குதான், அப்போதே மாடு மேய்க்க போயிருக்க வேண்டும். என்ன செய்ய.

இவ்வளும் புலம்பி விட்டு, வாய்ப்பு கிடைத்தால் நானும் இங்கு இருப்பேன். என்ன செய்ய. ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும். எதை இழந்து எதைப் பெற வேண்டுமென்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஒன்று, எதை செய்தாலும் "ஒரு வேளை, அந்த முடிவையே எடுத்திருக்கலாமோ" என்று புலம்பத்தான் செய்வோம். மனித மனம்.

Monday, June 18, 2012

ஆன்-சைட் அமெரிக்கா 1


என் புருஷனும் கச்சேரிக்குப் போனான் என்பது போல், என் தங்கமணி கூட 'எங்க ரங்கமணி ஆன்-சைட் போயிருக்காரு' என்று சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது. காலம் போன காலத்தில் நம்மை அனுப்பி படாத பாடு படுத்துகிறார்கள். எப்படியோ நானும் 'அமெரிக்கா' வந்து விட்டேன்.

அதற்காக முதலில் விசா நேர்காணலுக்கு அனுப்பும்போதே பயங்கரமாக தயார் செய்தனர். 'கண்ணைப் பார்த்து பேசு, மசால் கோட்டை தாண்டாமல் நில், பயப்படாமல் பேசு, ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் நன்றி சொல்' எனப் பலப் பல விஷயங்கள். அங்கு என்னடாவென்றால் கல்யாணம் ஆகி விட்டதா என்று சம்பந்தமே இல்லாமல் கேட்டு விசா கொடுத்து விட்டனர்.

சரி, அலுவலகத்தில், இதோ அதோ என்று இழுத்தடித்து, கடைசியில் கிளம்ப வேண்டும் என்று நிச்சயமாக தெரிந்த பின், மூன்று மாதத்திற்கு தேவியான அரிசி, தொக்கு, ரெடி மிக்ஸ் என்று பலப் பல விஷயங்களை தயார் செய்ய வேண்டும். அதற்கு அங்கிருந்து திரும்ப வந்த நண்பர்களின் உதவி மிக முக்கியம். அவர்களின் உதவியோடு எல்லாம் வாங்கி, ஆயத்தப்பட வேண்டும்.

விமானத்தில், நினைத்தது போலவே, உலக வரலாற்றில் முதல் முறையாக எனக்கு அருகில் ஒரு அழகிய வெளிநாட்டு இளம் பெண். ஆனால், அதற்கு அந்தப் பக்கம், நம்மாளு. "அவருக்கு இதாம் மொத தடவையாம். சீட் பெல்ட் போட தெரியாதாம்." அட பக்கி. அதுக்கப்புறம் அவன் போட்ட கடலைல அந்த பொண்ணே கடுப்பாகி சீட் மாறி போயிடுச்சி.

இறங்கிய பின், ஓரிரு நாட்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலவே இருந்தது. பேசுவதும் புரியாமல், என்ன செய்வதென்றும் தெரியாமல். அதன் பின்புதான் ஓரளவு தெளிவானது. என்னதான் நிறைய படித்திருந்தாலும், நண்பர்கள் மூலம் கேள்விப் பட்டிருந்தாலும், நேரில் காணும்போது உண்மை கொஞ்சம் உறைக்கத்தான் செய்கிறது.

விதிகளை மதிக்கும் பண்பு. அதில் பயத்தை விட நிறைய மரியாதையே உள்ளது போல படுகிறது. ஏற்கனவே நம்மூரில் சாலை நடைமுறையைப் பற்றி குமுறி இருக்கிறேன். வேலையை சரியாக செய்தவுடன் மனமுவந்து பாராட்டுகிறார்கள். நம்மூரில் தலை கீழாக நின்றாலும் அது நடக்காது.யாராக இருந்தாலும் மதிக்கும் குணம். குழந்தைகளுக்கும் ஏன் விலங்குகளுக்குக் கூட நிறைய மரியாதை. இருந்தாலும் திருஷ்டி இல்லாமலா? ஒரு சில பேர் நம்மைப் பார்த்தாலே, ஏதோ வாந்தி வருவது போல முகம் மாறுவது. நம்மைப் பார்த்து புன்னகை செய்தாலும், ஏதாவது உதவி கேட்டால் ஒதுங்கி விடுவது (என்னுடைய அனுபவம்). அதிலும் இங்கு ரொம்ப நாளாக இருக்கும் நம்மாட்களோ, அவர்களே பரவாயில்லை எனும்படி ஆக்கி விட்டார்கள். தமிழில் பேசுகிறார்களே என்று "எப்படி இருக்கீங்க" என்றால் "Doing Good" என்று சொல்லி விட்டு ஓடி விடுகிறார்கள்.


இன்னொரு மிக முக்கியமான விஷயம். கலாச்சாரம் என்று ஏதோ உண்டாமே. நமக்கே அது கிட்டத்தட்ட காணாமல் போய் விட்டது. இங்கே என்னுடைய வெள்ளைக்கார அதிகாரி தன்னுடைய குடும்ப புகைப்படத்தைக் காட்டி (நம்மூரில் அது எப்போது நடக்காது) அது என்னுடைய பெண், பக்கத்தில் இருப்பது அவளுடைய 'Boy Friend' என்றார். நமக்குத்தான் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தாலும், படித்திருந்தாலும் சற்றே 'சுரீர்' என்றது.


இன்னொரு முக்கியமான தகுதி, கார் ஓட்டுவது. இல்லையெனில் யாரையாவது நம்பிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். வீடியோ கேமில் ஓட்டுவது போல சுலபம்தான் என்றாலும், விதிகள்தான் மிகவும் முக்கியம். எனக்கு மூன்று மாதம்தான் என்பதால் பிரச்சினை இல்லை.

எல்லாம் எங்களுக்குத் தெரியும், நாங்களும் அமெரிக்கா போயிருக்கோம் என்பவர்களுக்காக, "நானும் போயிருக்கேன். இத வச்சி ஒரு பதிவு போடலாமுன்னுதான்.. வேற ஒன்னுமில்லீங்கோ"



Tuesday, June 5, 2012

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம். இந்த நான்கு மாத கால இடைவெளியை பூர்த்தி செய்ய, அடிக்கடி பதிவு போட வேண்டும் என்று எண்ணியுள்ளேன். பார்ப்போம். நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்..

கஹாணி. சமீபத்தில் மிகவும் ரசித்த திரைப்படம். பாகிஸ்தானில் இருந்தும், சீனாவில் இருந்தும் வரும் தீவிரவாதிகள், சண்டை, பாடல்கள் எதுவும் இல்லாத, ஆனாலும் ஒரு அருமையான ரசிக்கும் வகையில் இருந்த திரைப்படம். மௌன குருவை விட அட்டகாசமான திரைப்படம். உண்மையிலே இது போன்ற திரைப்படங்களை அப்படியே ரீமேக்கினால், உண்மையிலேயே 'ஒஸ்தியாக' இருக்கும். கொல்கத்தாவில், மெட்ரோ ரயிலில் நடக்கும் விபத்து. காணாமல் போன கணவனைத் தேடி வரும் இளம்பெண், சாதாரண அரசாங்க ஊழியர்கள் போர்வையில் நாட்டுக்கு நல்லதும் கெட்டதும் செய்யும் ஆட்கள் என்று பல முடிச்சுகள் போட்டு, இறுதியில் அட்டகாசமான முடிவு உள்ள படம்.

டெல்லி பெல்லி. என்ன தைரியத்தில் இந்த படத்தை தமிழில் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கருவை மட்டும் வைத்துக் கொண்டு, தமிழுக்கேற்றவாறு கலாசாரம் கெடாமல் எடுக்கிறோம் என்றால் சாதாரண மசாலா படத்தை விட கேவலமாக இருக்கும். பார்க்கலாம். ரசிக்கும் படி இருந்தால், உண்மையிலேயே மிகவும் சந்தோஷம்.

மற்றபடி, ஒரு கல் ஒரு கண்ணாடி, வழக்கு எண் என பல படங்கள். வழக்கு எண், வழக்கத்திலிருந்து சற்றே மாறுபட்டிருந்த படம். ஆனாலும், காட்சிகள் அந்தந்த பாத்திரங்களின் பார்வையில் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். OK OK ஓகே. கலகலப்பு கல கல. மற்றபடி எதுவுமில்லை.

ரொம்ப நாள் முன், சன் டிவியில் ரமணி vs ரமணி என்ற தொடர் வந்தது. யாருக்காவது நினைவில் உள்ளதா என்று தெரியவில்லை. அப்போது அவ்வளவாக புரியவில்லை என்றாலும் எனக்கு பார்க்க மிகவும் பிடிக்கும். அது ஹிட் என்பதால் இரண்டாம் பாகம் கூட வந்தது. ஆனால், அது அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. இப்போது முதல் பாகம் பார்க்கும்போதுதான் புரிகிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பே, இப்போதுள்ள தம்பதியர் எப்படி இருப்பார்கள் என்பதை தெளிவாக காட்டியிருப்பார்கள். நாகா இப்படியெல்லாம் எடுத்து விட்டு பின் ஏன் 'ஆனந்தபுரத்து வீடு' என்ற மொக்கை படத்தை எடுத்தாரோ தெரியவில்லை.

கணவனை வாடா போடா என அழைப்பது, சமையல் தெரியாமல் தினமும் வெளியில் சாப்பிடுவது, பள்ளியறைக்கு செல்லப் பெயர், விளம்பர நிறுவன வேலை, ICICI வங்கி வேலை, கிரெடிட் கார்டு, கைப்பேசி, 'க்ளப்டோமேனியா' போன்ற சொற்கள் (இது பற்றி தெரியவில்லையெனில், கண்களால் கைது செய் படம் பார்க்கவும்). தாலியை கழற்றி வைப்பது என பல அட்டகாசங்கள். அதிலும் குறிப்பாக, கீழே வரும் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.


கற்பனை கையாடல். இதைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஏதாவது திரைப்படம் நினைவுக்கு வரலாம். எனக்கு அலை பாயுதே நினைவுக்கு வந்தது. அதே போல சுஜாதாவின் 'நிர்வாண நகரம்' படித்தவர்களுக்கு 'மௌன குரு' படம் பார்க்கும்போது நினைவுக்கு வந்திருக்கலாம். (பொது தொலைப்பேசியை உடைக்கும் காட்சி). இதே போல, ரமணா படத்தில் வரும் மருத்துவமனை காட்சி, ஒரு ராஜேஷ் குமார் நாவலில் வரும். இதைப் பற்றி முன்பே எழுதி உள்ளேன். இவை அனைத்துமே படத்தின் கதைக்கு அவ்வளவாக சம்பந்தமில்லாத காட்சிகள்தான். ஆனாலும், அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது என் எண்ணம். இதனால் அந்த இயக்குனர்களின் மேல் சிறிய வருத்தமும், சற்றே சந்தேகமும் கூட வருகிறது. ஏதேனும் நல்ல காட்சிகள் பார்க்கும் போது 'எங்கிருந்து சுட்டிருப்பார்களோ' என்று. கலப்பு படத்தில் கூட சந்தானம் வரும் காட்சிகள் எனக்கு 'கண்டேன் காதலை' படத்தை நினைவூட்டியது. முறைப்பெண், தாத்தா. என்னவோ போங்க.

இன்னொரு வருத்தமான நிகழ்வு. ஆனந்த விகடன் - மதன் பிரிவு. இதில் உள்குத்தாக நிறைய விஷயங்கள் நடந்திருக்கும். நஷ்டம் என்னவோ நமக்குத்தான் என்று சொல்ல முடியாது. கூடிய விரைவில் 'ஓ பக்கங்கள்' போல குமுதத்திலோ, கல்கியிலோ அல்லது 'அம்மா' சார்பில் ஆரம்பிக்கும் வார இதழிலோ 'மதன் பதில்கள்' வரலாம். காத்திருப்போம்.

Sunday, May 6, 2012

என்ன வாழ்க்கடா இது??


அடடடா.. ஒரு பதிவு போடலாம்னு நெனச்சு, அத எழுதி பதிவிட படாத பாடு பட வேண்டி இருக்கப்பா.. என்ன எழுதன்னே தெரியலே.. உலகத்தில நெறைய விஷயங்கள் நடக்குது. ஆனா நமக்குத்தான் ஒன்னும் சிக்க மாட்டிங்குது.. கொடுமையடா..மனசுல நெறைய இருக்கு.. அத எழுதனும்னு உக்காந்தா, அந்த எழுத்துதான், வார்த்தை வர மாட்டேங்குது.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.. தினசரி நிறைய மரணங்கள் பற்றி படிக்கிறோம்.. பார்க்கிறோம்.. "அவ்வளவுதான்.. போய்ட்டாங்க.. இனிமே அதப்பத்தி பேசி என்ன ஆகப் போவுது.. ஆக வேண்டிய வேலையைப் பாருங்க.. May his/her soul Rest In Piece" என்று எண்ணி விடுகிறோம்.. முதல் முறையாக ஒரு மரணம்.. பிரிவை உணர்த்திய இழப்பு.. எனது அத்தை.. அப்பாவின் தங்கை. மிக சாதாரணமாக ஒரு ஞாயிறு அன்று, "சரி அடுத்த வாரம் பாக்கலாம்" என்று சொல்லி விட்டு வந்து தூங்கியவன், அதிகாலையில் எழுப்பியது அந்த செய்திதான். மாரடைப்பு..

திருமணத்திற்கு பிறகு, உயிர் பயம் மிக மிக அதிகமாகி விட்டது.. நம்மை நம்பி ஒரு உயிர்.. அந்த உயிருக்குள் ஒரு உயிர்.. முன்பெல்லாம், சாலையில் மிக சாதாரணமாக சில்லறை வாறி "அதெல்லாம் ஒண்ணுமில்ல மச்சான்.. டக்குனு போயிரலாமுன்னு நெனச்சேன்" என்றெல்லாம் பீலா விட்டுத் திரிந்த காலம். இப்போது எல்லாம் சாலை விபத்தில் வாலிபர் பலி என்றாலே உடம்பு உதறல் எடுக்கிறது..

அதிகாலை 6 மணிக்கெல்லாம் சிக்னல் போட்டு விடுகின்றனர். அதை யாரும் மதிப்பதுமில்லை. சிக்னல் இல்லையென்றால் கூட, வலது பக்கம் திரும்பும்போது இரு பக்கமும் பார்த்து திரும்புவார்கள். ஆனால், வேகமாக வரும்போது, பச்சை எரிந்தால், வந்த வேகத்தில் திரும்ப வேண்டியது, அந்த பக்கம் இருந்து எவனாவது வந்தால், "நான் நல்லவன்பா" என்ற நினைப்போடு போக வேண்டியதுதான். ஒரு சில நண்பர்களின் மேல் இதனால் எனக்கு கோபம் கூட உண்டு.. சிக்னலை மதிக்காதது, ஆம்புலன்ஸ் போனால், அதன் பின்னாலேயே ஒட்டிக்கொண்டு போக வேண்டியது..

தினமும் எத்தனையோ தவறுகள் உலகில் நடக்கின்றன.. ஊடகங்கள், திரைப்படங்கள் என்று வேறு வேறு பெயர்களில், வேறு வேறு இடங்களில் நிறைய.. 'அந்நியன்' படம் பார்க்கும்போது சிரித்தேன். "இதெல்லாம் ஒரு மேட்டர்னு கொலை செய்யலாமா" என்று. ஆனால், இதையே கீழ்க் கண்ட தினமணி கார்டூனும் நிரூபிக்கிறது.


"மொதல்ல சிக்னல மீறற எல்லரையும் என்கவுண்டர்ல போடுங்க சார். இவனுங்களைவிட பெரிய பயங்கரவாதிகள் நாட்லே யாரும் கிடையாது"


இதையெல்லாம் எப்படி தடுப்பது. யார் யார் தவறு செய்கிறார்கள்? நான் அலுவலகம் செய்வது அசாதாராண நேரம். அந்த நேரங்களில், மஞ்சள் நிற நம்பர் பிளேட்காரர்கள் யாருமே இல்லாத அந்த சாலையில் சிக்னலுக்காக நிற்பதையும் பார்த்திருக்கிறேன். இருக்குமதி செய்யப்பட்ட 'பேன்சி' நம்பர் கொண்ட வண்டிகள் மீறுவதையும் பார்த்திருக்கிறேன். அனைவருக்கும் 'இது நம்மூரு' என்ற எண்ணமா என்று தெரியவில்லை.

இப்போதுதான் விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை/அபராதம் என்றனர். ஆனாலும் ஒன்றும் குறையவில்லை. அதுதான் அணைத்து இடங்களிலும் கேமரா உள்ளதே. வெளிநாடுகளைப் போல, அவ்வப்போது அதைப் பார்த்து அதில் விதிகளை மீறுவோருக்கு நோட்டிஸ் அனுப்பினால் கூட கொஞ்சம் பயம் வருமே. கொஞ்ச நாள் இதை செய்தால் கூட நன்றாக இருக்கும். குறிப்பாக மாநகராட்சி பேருந்து ஓட்டுநர்களுக்கும், அரசு வாகனங்களுக்கும் கூட. இது நடக்க சாத்தியமே இல்லைதான்.


வேளச்சேரியில் இருந்து தரமணி போகும்போது, எதிரில் Wrong sideல் வேகமாக வரும் வண்டியைப் பார்த்து பயந்து ஓரமாக ஒதுங்கும்போதும் சரி. வேளச்சேரி புறவழிச்சாலையில் இருந்து, குருநானக் கல்லூரிக்கு திரும்ப அதிகம் 12 வினாடிகள் கொடுப்பார்கள். அதற்கும் இடம் தராமல், இரு பக்கமும் வண்டி போகும்போது தடுமாறி அந்தப் பக்கம் செல்லும்போதும் வண்டி ஓட்டும் அன்பர்கள் அசிங்கமாக சொல்லுவார்கள் "ஏண்டா பேமானி. பாத்து வர மாட்ட?" அப்போது மட்டும் சற்றே சத்தமாக கத்துவேன். கேட்குமோ என்னவோ தெரியாது.

"நீங்க போய் உலகத்த காப்பாத்துங்க. எனக்கு அவசர வேல எதுவும் இல்ல".


எப்படியாக இருந்தாலும், மக்களுக்கு பயம் வர வேண்டும். எனக்கு உள்ளது. இனி கண்டிப்பாக நான் நல்லவனாக இருப்பேன். அனைவருக்கும் பயம் வர வேண்டுமா? சட்டம் தன் கடமையை முறையாக செய்ய வேண்டும். அல்லது, வாகன ஓட்டிகள் அனைவரும், தங்கள் மனதிற்கு பிடித்தவர்களோடு ஒரு நாள் முழுதும், நீங்கள் எப்போதும் ஓட்டுவதுபோல போய் வாருங்கள். பயம் வரலாம். அப்படியே கொஞ்சம் ஐந்து நொடிகள் பொறுமையும்.

Sunday, January 1, 2012

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம்.. நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறேன். இதுவரை சாதாரண மணியாக இருந்த நான், இப்போது ரங்கமணியாகிப் போனதுதான் கடந்த சில மாதங்களாக பதிவிட முடியாததற்குக் காரணம். அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன். நான் இப்போது மீண்டு(ம்) வந்து விட்டேன். இனி பின்னிப் பெடலெடுக்க வேண்டியதுதான் (முடியாது என்றாலும். நாங்க நேத்து ஒரு பேச்சு இன்னைக்கி ஒரு பேச்சு கிடையாது).சாதா மணியாக இருந்த போது சுதந்திரமாக இருந்தேன் என்று இப்போதுதான் புரிகிறது. அப்போது, "எப்ப பாத்தாலும் பசங்களோட சுத்திக்கிட்டே இருக்கமே, நமக்கு ஒன்னு கெடக்காதா?" என்று திரிந்தது நினைவுக்கு வருகிறது.என்ன செய்ய. அக்கரைப் பச்சை.

கடந்த வருடம், மிக நன்றாகவே போனது. வழக்கம் போல மேடு பள்ளமாக இருந்தாலும், வாழ்க்கையின் அடுத்த படிக்கு போய் விட்டபடியால், மிக மிக சந்தோசமான வருடம்தான். புது வேலை, புது பைக், புது பொண்டாட்டி.., கலக்குறே அரவிந்த். சரி. தங்கமணி அவரசமாக அழைப்பதால், நானும் என்னைக் கவர்ந்த, கவலைப்பட வைத்த சில விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன்.

வருட ஆரம்பம் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும், போக போக நன்றாகவே இருந்தது. கடைசியில் சூடு பிடித்து, 'தானே' வந்து சரி செய்யும் நிலை ஆகிவிட்டது. குறிப்பாக இந்த வருடம் மக்கள் எழுச்சி அதிகமாக உள்ளது. தேவைப்பட்டால் நாங்களும் போராடுவோம் என்று மக்கள், தங்களுக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்காகவும் போராடுகின்றனர். அந்த கோடான கோடியில் நானும் ஒருவன் என்பதை, சற்றே தாழ்ந்த பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவான பாத்திரத்தில், முழுதும் தண்ணீரை ஊற்றாமல், கொஞ்சம் பாலும் சேர்த்து அனைவரும் ஊற்றுவதால், மொத்தமாக பால் போல தெரிகிறது. அதுவும் நல்லதுக்குத்தான். நாம் ஒற்றுமையாவது நமது சகோதரர்களுடன் சண்டை போடவா என்று சலனப்பட்டாலும், நம்மை ஒற்றுமையாக்கியதற்கு அவர்களுக்கு நன்றி. எப்போதும், மனிதம், தேசியம், இனம் என்றுதான் மனிதனுக்கு உணர்வு இருக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயம் கட்டுக்குலையாமல் இருக்கும். ஒன்றே ஒன்று மட்டும் எப்போதும் மாறாமல் இருப்பது.தமிழன் எப்போதும் அடுத்தவன் அழிந்து தான் வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டான், இதுவரை தான் அழிந்துதான் மற்றவர்களை வாழ வைத்துள்ளான்.இங்கு யாரும் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல. இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நல்லாருப்போம் நல்லாருப்போம் எல்லோரும் நல்லாருப்போம். சரி, கொஞ்சம் வேறு மாதிரி போய் விட்டோமோ? விடுங்க, விடுங்க.. என்னைக் கவர்ந்த சில படங்கள் பற்றி மட்டும் சொல்லி விட்டு 'எஸ்' ஆகிறேன்.

பார்த்து ரசித்த படங்கள்:

காவலன்
சிறுத்தை, வானம் (ஒரிஜினல் பார்த்திருந்தாலும், சந்தானத்துக்காக)
பயணம்
குள்ள நரிக்கூட்டம்
கோ
காஞ்சனா
மங்காத்தா
முரண்

பார்த்து நொந்த படங்கள்:

நடுநிசி நாய்கள்
அவன் இவன்
180
வந்தான் கொன்றான், மன்னிக்க வென்றான்
ஏழாம் அறிவு (தங்கமணியுடன் முதல் படம்)
வேலாயுதம் (இரண்டாவது)
ராஜ பாட்டை(மூன்றாவது)
விதி என் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா??

தவற விட்டதாலேயே தப்பித்தவை:

இளைஞன்
எங்கேயும் காதல்
வேங்கை
ரௌத்திரம்
வெடி
வித்தகன்
ஒஸ்தி

தவற விட்டு தவறாக ரசித்தவை (வீட்டுலதான்) / ரசிக்க வேண்டியவை:

நர்த்தகி
உயர்திரு 420
வெங்காயம்
வாகை சூட வா
சதுரங்கம்
வர்ணம்
தம்பி வேட்டோத்தி சுந்தரம்
மம்பட்டியான்
உச்சிதனை முகர்ந்தால்
பாலை
மயக்கம் என்ன
போராளி

பார்த்த பின் அனுபவித்தவை / அனுபவித்துப் பார்த்தவை:

ஆடுகளம்
யுத்தம் செய்
ஆரண்ய காண்டம்
அழகர்சாமியின் குதிரை
தெய்வத் திருமகள் (சாராவுக்காக)
எங்கேயும் எப்போதும் (சாதா மணியாக கடைசி படம். இயக்குனர் நாமக்கல்காரர் என்பதில் எச்சகச்ச, மன்னிக்க, எக்கச்சக்க பெருமை :-) )
வாகை சூட வா
மௌன குரு (என் தங்கமணி கூறியது, "இந்த ஒரு படத்துக்காக, மத்த மூணு படத்துக்கு கூட்டிட்டு போனத மன்னிச்சு விடுறேன்".)

மக்களே.. அனைவருக்கும் இந்த வருடம் போன வருடத்தை விட நன்றாக அமையும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Wednesday, August 24, 2011

நமக்கேன் வம்பு. இதுவே எங்க ஊரா இருந்தா??

சென்னையில் ஒரு பிரபல மூன்று நட்சத்திர விடுதியிலுள்ள உணவு விடுதிக்கு, முதல் முறை வெளிநாடு செல்லும் நண்பன் (மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன்), திருமணம் நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளைகள் இருவர், மற்றும் இரு புதுமணத் தம்பதியினர், கடைசியாக போனால் போகட்டும் என்று இரு கட்டை பிரமச்சாரிகள் என்று பத்து பேர் சாப்பிடப் போனோம். எங்களுக்கே தெரியும், அங்கு ஒரு நாள் சாப்பிட ஆகும் செலவில் பத்து முறை பத்து பேர் வெளியில் நன்றாக சாப்பிடலாம் என்று. இருந்தாலும், இது எப்போதோ ஒரு முறை (அதுவே கடைசி முறையாகி விட்டது) என்று கிளம்பிப் போனோம்.

ஒரு காலத்தில் அந்த இடத்தை வெளியிலிருந்து பெருமூச்சோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அப்படியேவே போயிருக்கலாம். உள்ளே போனவுடன், சற்று நேரம் அனைவரும் வரும் வரை காத்திருந்தோம். அதன் பின், அனைவரும் வந்தவுடன் உள்ளே போனோம். நண்பனின் ஒரு வயது குழந்தையின் காலில், நடந்தால் சத்தம் வரும் காலனியை அணிவித்திருந்தார்கள். அவன் அங்குமிங்கும் ஓட, சத்தம் சற்று அதிகமாகவே வந்தது. உடனே வந்து அதை எடுத்து விடுமாறு கூறினர். சரி, மற்றவர்களுக்கு அது தொந்தரவுதானே என்று நாங்களும் கழற்றி விட்டோம்.

அங்கு சாப்பிட வந்த எல்லோரையும் எங்கேயோ பார்த்தது போலவே இருந்தது. குறிப்பாக ஒருவர், பின்புதான் நண்பன் சொன்னான் 'அவர்தான் குருநாத் மெய்யப்பன், CSK முதலாளி'. சரிதான் என்று நினைத்துக்கொண்டு, 'இரண்டாம் பக்கத்தில் நாலாவதாக உள்ளது, முதல் பக்கத்தில் மூன்றாவதாக உள்ளது' என்று தடுமாறி சொல்லி விட்டோம். பின் வழக்கம் போல நாங்கள் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். சொன்ன அனைத்தும் வந்தன.

எங்களில் சைவ பட்சிகள் நால்வர். மற்ற ஆறு பேரும் அசைவம். சைவப் பிராணிகள் பச்சை நிற மேலாடையும், அசைவப் பிராணிகள் சிகப்பு மேலாடையும் அணிய வேண்டுமாம். எங்களுக்கு முழுதும் சிகப்பு மட்டுமே வைத்திருந்தனர். நாங்கள் அனைவரும் அதை மடித்து பத்திரமாக வைத்திருந்தோம். வந்தவுடனே அசைவத்தை மாற்றிப் பரிமாறி விட்டனர். இங்கே இல்லை அங்கே என்றவுடன் மேலாடையை அணிய வேண்டியதுதானே? என்றனர். அதன் பின்பே பச்சை உடையும் கொடுத்தனர்.

சரி எல்லாம் வந்து விட்டன என்று முள்கரண்டி (அட Spoon & Fork) கேட்டால், இங்கு இந்திய கலாச்சாரப்படி சாப்பிட வேண்டும், அதெல்லாம் கொடுப்பதில்லை என்றனர். சற்றே கோபம் வந்தாலும், சரி நாம் எப்போதும் சாப்பிடுவதுதானே என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தோம். பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு 'பணக்காரத்தனமிக்க' தம்பதியினர் அவர்களுக்கு உணவு வந்தவுடன் ஒரு பார்வை பார்த்தனர். உடனே தோசை சுடும் கரண்டி வரை எல்லாமே அங்கே போய் விட்டது. சரிதான் இதற்கு மேல் இருந்தால் சரிப்படாது என்று கடைசியாக முடிக்கலாம் என்று ஒரு பரிமாறுபவரை அழைத்தோம். அவரிடம் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே மேலாளர் ஒருவர் வந்து "அங்கே போய்க் கவனி, இங்கே என்ன வேலை" என்று சொன்னார். பில் கொடுப்பதற்கு முன், அந்த விடுதியின் சிறப்பு அட்டை இருக்கிறதா என்று கேட்டார். இல்லை, வேறு ஏதாவது கடன் அட்டைக்கு எதுவும் தள்ளுபடி உண்டா என்றவுடன், "அது எதுவும் இல்லை என்றதால்தான் கேட்டேன்" என்றார். தலையில் அடித்துக் கொண்டு மிச்சமுள்ள மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டோம்.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில், அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாது. மீறி ஆசைப்பட்டாலும், நம் சத்தம் அதிகமாக இருக்க வேண்டும். Spoon கொடுக்க முடியாது என்றவுடனே கத்தியிருக்க வேண்டும். நமக்கு அதெல்லாம் வந்தால்தானே. சராசரியிலும் சராசரிக்கு கீழேதான் நாங்கள். 'நமக்கேன் வம்பு', சரி பொறுத்துப் போகலாம் என்று வந்ததற்கு, ஒரு பதிவுதான் மிச்சம்.

நான் நான் என்று பேசி எதுவும் நடக்காது. நாம் சேர்ந்துதான் செய்ய வேண்டும். மற்றவர்களின் அனுபவங்களை அங்கேயும், இங்கேயும் படிக்கலாம். இதற்காக முகப்புத்தகத்தில் ஒரு குழுமமும் உள்ளது. மக்களின் நலன் கருதி வெளியிடுவது அரவிந்த்.

'என் விகடனில்' ஒரு முறை இயக்குனர் வெற்றி மாறன் சொன்னார், சென்னையில் சாலையில் ஒருவருக்கு ஒரு விபத்து அல்லது பிரச்சினை என்றால், உதவிக்கு வருபவர்கள் கண்டிப்பாக சென்னையை சேர்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள். அதுவும் உண்மைதான். எங்கள் வீட்டில் எல்லாம், எந்தப் பிரச்சினைக்கும் போக வேண்டாம், அது நம்ம ஊரில்லை என்று சொல்லி சொல்லி எல்லாமே மரத்து விட்டது. நமக்கென்ன, நமக்கேன் வம்பு என்றே ஒதுங்கி ஒதுங்கி போகிறோம். பெரிய இடமானாலும் சரி, சின்ன இடமானாலும் சரி. வெளியூர்க்காரர்கள் அனைவரும் சென்னையில் ஒரு பிரச்சினையில் சிக்கி, எப்படியாவது தப்பித்து வந்த பின் சொல்லும் வார்த்தை, "இதே எங்க ஊரா மட்டும் இருந்தது, அவ்ளோதான்".

நான் ஊரில் இருந்தால் சாலையில் வண்டியில் போகும்போது, நடந்து செல்பவர்கள் திரும்பிப் பார்த்தாலே, "வரிங்களா?' என்று கேட்பேன். இங்கோ, வயதானவர்கள் கையை நீட்டினால் கூட நிற்பதில்லை. ஒரு முறை பட்ட அனுபவம் அப்படி. "நான் நேரா போகணும், இங்க எறங்குங்க" என்றவுடன் "இவ்ளோ தூரம் வந்துட்ட இல்ல, இன்னும் கொஞ்சம் உள்ள போனா என்னவாம்" என்று திட்டு வாங்கியதுதான் மிச்சம். இதற்குதான் சொல்லியிருக்கிறார்கள் " கால் வயித்துக் கஞ்சினாலும், நம்ம வூட்டு கஞ்சியா இருக்கணும்".

"இப்படி எல்லாம் பெரிய ________ மாதிரி எழுதுறியே, நீ என்ன பண்ணப் போற" என்று கேட்கிறீர்களா? நான் இது போல சம்பவங்கள் நடந்த பின், தனியாக என் கற்பனையில் அவர்களை அடிப்பேன். சென்னையைப் பொறுத்தவரை, யார் முதலில் குரலை உயர்த்திப் பேசுகிறார்களோ, அவர்களே நியாயஸ்தர்கள். நம் மீது எந்தத் தவறும் இல்லை என்று சமாதானப் படுத்திக் கொண்டு பொறுத்துப் போனோம், போகிறோம், போவோம். இதற்காக உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்றாலும், அந்த ஒரு கணத்தில் வரும் கோபம், குறைந்தது அந்த முழு நாளையே அழித்து விடும்.

காலையில் ஆறு மணிக்கு அலுவலுக்கு வண்டியில் வேளச்சேரியில் இருந்து தரமணி போகும்போது, எதிரில் Wrong sideல் வேகமாக வரும் வண்டியைப் பார்த்து பயந்து ஓரமாக ஒதுங்கும்போதும் சரி. வேளச்சேரி புறவழிச்சாலையில் இருந்து, குருநானக் கல்லூரிக்கு திரும்ப அதிகம் 12 வினாடிகள் கொடுப்பார்கள். அதற்கும் இடம் தராமல், இரு பக்கமும் வண்டி போகும்போது தடுமாறி அந்தப் பக்கம் செல்லும்போதும் வண்டி ஓட்டும் அன்பர்கள் அசிங்கமாக சொல்லுவார்கள் "ஏண்டா பேமானி. பாத்து வர மாட்ட?" அப்போது மட்டும் சற்றே சத்தமாக கத்துவேன். கேட்குமோ என்னவோ தெரியாது.


"நீங்க போய் உலகத்த காப்பாத்துங்க. எனக்கு அவசர வேல எதுவும் இல்ல". அதன் பின் நினைத்துக் கொள்வேன். "மவனே, நீ மட்டும் எங்க ஊருக்கு வா.."