Thursday, July 11, 2013

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

இந்த வருடத்தில் எப்படியாவது மாதத்திற்கு இரண்டு பதிவாவது போட்டு விடவேண்டும் என்று நினைத்து, நான்கு மாதங்கள் அடித்துப் பிடித்து போட்டுவிட்டேன். பின்பு சமாளிக்க முடியவில்லை. எனவே, இனி மாதம் ஒரு பதிவாவது போட்டு விட வேண்டும் என்று முடிவை மாற்றி விட்டேன். இதை நடப்பு மாதத்தோடு நிறைவேற்றியும் விட்டேன்.

விமர்சனங்கள்:

நேரம்: ஒரு படத்திற்கு தலைப்பு எவ்வளவு முக்கியம் என்று இந்தப்படத்தில்தான் எனக்குப் புரிந்தது. ஒருவேளை அதிர்ஷ்டம் என்றுவைத்திருந்தால், படம் நட்டுக் கொண்டு போயிருக்குமோ என்னவோ. மந்தைவெளியை சுற்றி, நான்கு தெருக்களில், பத்து பேர் சுற்றி சுற்றி வந்தே படத்தை முடித்து விட்டனர். ஆனாலும், நல்ல நேரம்தான். பார்க்கலாம்.



தீயா வேலை செய்யணும் குமாரு: படத்துக்கு போனோமா, சும்மா ஜாலியா இருந்தோமா, எங்கிருந்து சுட்டிருந்தா நமக்கென்ன, என்று நினைக்கும் மக்கள் இருக்கும் வரை, சுந்தருக்கு கவலை இல்லை. சந்தானத்துக்கும் கவலை இல்லை. சுட்ட பழமோ சுடாத பழமோ, இனித்தால் மட்டும் போதும்.


தில்லு முல்லு: பல நேரங்களில் பழையது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தெரிய இது போன்ற புதியவைகள் நமக்கு தேவைப்படுகிறது.


குட்டிப் புலி: படத்தில் எனக்குப் பிடித்தது 'பொன்னோவியம்' பாடல் மட்டும்தான்.



நாட்டு நடப்பு:

சமீப காலங்களில் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது, மீண்டும் மக்களிடையே ஒளிந்திருந்த 'சாதி' மீண்டும் வெளியே வந்து விட்டது என்றே தோன்றுகிறது. இதனால், ஒரு தற்கொலை, அப்பாவி மக்களுக்கு பாதிப்பு, இன்னொரு தற்கொலை(?). இன்னும் இது எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை.

என்னைப் பொறுத்த வரை இது ஒரு 'இனக் கவர்ச்சியால்' வந்த காதல்தான்.இதை ஏதோ தெய்வீக காதல் அளவிற்கு ஏன் புகழ்கிறார்கள் என்றே தெரியவில்லை. [இது என்னுடைய கருத்து. நான் சாதி வெறியன் அல்ல, எனக்கு தோன்றியதால் கூறியுள்ளேன்] சாதியை மறந்து விடுங்கள். நம் 20 வயது தம்பி ஒருவன் காதலிக்கிறான் என்றால், நாம் என்ன அறிவுரை கூறுவோம்? 'இன்னும் வயசிருக்குடா' என்றுதானே?

என்னுடைய சந்தேகங்கள்: ஒருவேளை, திவ்யா தனது சாதியில், ஆனால் பொருளாதாரத்தில் தாழ்ந்த ஒருவனைக் காதலித்து, அதனால் அவளது தந்தை இறந்திருந்தால் அது உள்ளூர் நாளேட்டின் நான்காம் பக்க செய்தியோடு முடிந்திருக்கும். யாரும் திவ்யா பற்றி கவலைப் பட்டிருக்க மாட்டார்கள். 

இதே போல நடந்திருக்கும் யாருக்காவது ஏன் இந்த சாதிசங்க வழக்காளர்கள் சென்று வாதாடவில்லை? அதை விட, ஏன் இவர்கள்' சாதிக்காக' வாதாடவில்லை என்றால், தர்மபுரி கலவரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, இணைந்து வாதாடலாமே?

இளவரசன் தற்கொலை செய்து கொண்டிருந்தால், அதை ஏன் 'வீர மரணம்'அளவிற்கு புகழ வேண்டும்? தனது காதலால் இன மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளர்களே, சரி தனது காதல் தோற்று விட்டதே, நாம் இனி அந்த மக்களுக்காக, குறைந்தது பெற்றோருக்காவது வாழ வேண்டுமென்று தோன்றவில்லையே. இது சுயநலமில்லையா? 

சாதியுமில்லை மதமுமில்லை என்று சொல்லும் அனைவரிடமும் சாதியும் மதமும் ஒளிந்துள்ளன. இதை என் நண்பன் எனக்கு நிரூபித்தான். அவன் வேறு மதம். நான் அவனிடம் மதச் சார்பற்றவன் என்றேன், இல்லை என்று மேலே சொன்ன கருத்தை சொன்னான். அது அப்படியே போய் விட்டது.

இன்னொரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது, "உங்க மதத்துல அப்படி இருக்குமே, இப்படி பண்ணுவீங்களே" என்றெல்லாம் சொன்னவுடன், எனக்கு கோபம் வந்து "உங்க இதுல மட்டும் எப்படியாம்" என்றவுடன் அவன்சொன்னான், "நாந்தான் ஏற்கனவே சொன்னேன்ல". இது ஒரு வகையான எதிர்வினைதான். ஆனாலும், என்னுள்ளே என்னுடைய மதமும், சாதியும் ஒளிந்துள்ளன என்பதை அன்றுதான் கண்டு கொண்டேன்.

இந்த உலகில் யாருமே இன்னொரு மனிதனை 'மனிதனாக' பார்ப்பதில்லை.அவனை ஏதாவதொரு வகையில் நம்மோடு இணைத்துக் கொள்கிறோம் (சாதி,மதம், இனம், மொழி, நாடு) அல்லது அதையே காரணம் காட்டி பிரித்துவைக்கிறோம். ஏன் இப்படி?

இதைப் பற்றி நிறைய கலந்துரையாட வேண்டும். நானும் இதைப் பற்றி இன்னும்சில பதிவுகளை எழுத வேண்டும். யாரும் படித்து பின்னூட்டமிடுவதற்காக அல்ல. என் எண்ணங்களை பகிர வேண்டும் என்பதற்காக.

தயவு செய்து தங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களோ, தவறான கருத்துகளோ இருப்பின் கூறுங்கள், எடுத்து விடுகிறேன். நன்றி.

Monday, June 10, 2013

எனது கலைத்திறமை

ஏற்கனவே எனது கலைத்திறமையை பார்க்காதவர்களுக்காக..














வேற ஒன்னுமில்லீங்க ஒரு பதிவு போட்டு கணக்கு காமிக்கணும் அதான்...

Monday, May 20, 2013

ஆச்சரியப்படுத்தும் புதுமுகங்கள்!!

ஒரு வழியாக, ஆரம்பித்து ஆறு வருடங்கள் கழித்து, நாலு பேரைக் கெஞ்சிக் கூத்தாடி எப்படியோ, 10000 பேரின் வருகைகளை சம்பாதித்து விட்டேன். நன்றி நண்பர்களே..

சமீப காலமாக வந்த படங்களில், பெரிய இயக்குனர்களின் படங்களை விட, புது இயக்குனர்களின் படங்கள்தான் நன்றாக உள்ளன. சில படங்கள் வெற்றியடையவில்லை என்றாலும், மிக நன்றாகவே இருந்தன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். இவற்றில் பல இயக்குனர்களின் இரண்டாவது படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். சில படங்களை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன், ஆனாலும், மீண்டும் குறிப்பிடுகிறேன். சில படங்களை மறந்திருந்தால், பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

எந்தவொரு இயக்குனரும் தனது இரண்டாவது படத்தில்தான் தனது திறமையை நிரூபித்து உள்ளனர். உதாரணமாக பாரதி ராஜா, ஷங்கர், லிங்குசாமி போன்றோர் (வெற்றிக்கு), சசிகுமார் மற்றும் பலர் (தோல்விக்கு). அனைவருமே, தங்களின் இரண்டாவது படம் பார்க்கும்போது, முதல் படம் நினைவுக்கு வராமல், முற்றிலும் வித்தியாசமான கதைக்களனைக் கையாண்டுள்ளனர். ஆனால், அவர்களின் முதல் படம் நம் நினைவுக்கு வராமல், இரண்டாவது படத்திலேயே ஒன்ற வைத்ததில் தான் வெற்றி அடங்கியுள்ளது. கீழ்க்கண்ட அனைவரும் எந்த வரிசையில் வருகிறார்கள் என்று பார்ப்போம்.

எங்கேயும் எப்போதும் - சரவணன்:

என்னைப் பொறுத்த வரை, 2012ம் ஆண்டில் வந்த மிகச்சிறந்த படம். இயக்குனர் நாமக்கல்காரர் என்பதால் மட்டுமல்ல. படமும் நல்ல படம் என்பதால்தான். அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து இயக்குவதாக செய்தி. பார்ப்போம்.

படம் பார்க்காதவர்களுக்காக:

 

ஈரம் - அறிவழகன்:

பேயே இல்லாமல் வந்த பேய்ப்படம். இப்போது வல்லினம் படத்தை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். படம் கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்தி அமைந்துள்ளது போல. பார்ப்போம்.


ஆச்சரியங்கள் - ஹர்ஷவர்தன்:

படம் 'One Night at a Call Center' படத்தை நினைவூட்டினாலும், உண்மையிலேயே அப்படியொன்றும் குறை கூறும் அளவிற்கு இல்லை. தேவையில்லாத, லாஜிக் மீறல் இல்லாத காட்சிகள் எதுவும் இல்லை. இந்தப் படம் அவ்வளவாக வெற்றி அடையா விட்டாலும் கண்டிப்பாக அடுத்த படத்தில் சாதிப்பார் என்று நம்புகிறேன். இப்போது வந்துள்ள 'நேரம்' படமும் இதைப் போலவேதான் என்றும் நினைக்கிறேன்.

படம் பார்க்காதவர்களுக்காக:

 

புதுமுகங்கள் தேவை - மனீஷ் பாபு:

படம் எடுப்பதைப் பற்றி நிறைய படங்கள் நிறைய வந்துள்ளன. சில படங்கள் குழப்பத்தையே உண்டாக்கின (பொம்மலாட்டம் போன்றவை). ஆனால் இந்தப் படம், மிகத் தெளிவான குழப்பத்தை உண்டாக்கியிருப்பர். கடைசி காட்சி வரை 'எங்கடா, continuity இல்லையே' என்ற குழப்பம்தான் இருந்தது. இன்னும் எனக்கு பெயர்க் குழப்பம் தீரவேயில்லை. கீழே வரும் இந்த காணொளியை பாருங்கள், அதன் பின் இந்தப் படத்தைப் பாருங்கள். நீங்களும் நிறைய கண்டு பிடிக்கலாம்.

ஆரண்ய காண்டம் - தியாகராஜன் குமாரராஜா:

இந்தப் படத்திற்கு எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தங்கமணி இந்தப் படத்தைப் பார்த்து விட்டு என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு போய் விட்டார்கள். ஆனாலும் எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்தது. எங்கே போயிட்டீங்க தியாகராஜன்?? படத்தின் பின்னணி இசைதான் என்னை மிகவும் கவர்ந்தது. அதன் தொகுப்பு இங்கே.

 

மௌன குரு, சாந்தகுமார்:

சாதாரணமாகவே மிக நல்ல படம். ராஜபாட்டை போல மொக்கை படத்துடன் வந்ததால் இன்னும் ரொம்ப நன்றாகவே இருந்தது. நீங்களும் எங்கே இருக்கீங்க சாந்தகுமார்?.

தடையற தாக்க - மகிழ் திருமேனி:

அடடே, திருட்டுத்தனமாகப் பார்க்கிறோமே என்று நினைக்க வைத்த படம். அருமையான திரில்லர் படம். நன்கு கவனிக்கப்பட்ட அளவிற்கு வசூல் இல்லை என்று நினைக்கிறேன். Youtubeல் அதிகமாக பார்க்கப் பட்ட தமிழ்ப் படங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.


நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - பாலாஜி தரணீதரன்:

இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியுமா என்று வாயைப் பிளந்து பார்த்த படம். அடடே, நண்பர்களுடன் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைக்க வைத்த படம்.

இன்னும் குள்ளநரிக்கூட்டம் - ஸ்ரீபாலாஜி, நான் - ஜீவா சங்கர், சாட்டை - அன்பழகன் என்று பலரும், வழக்கமான பாணியை விட்டு விட்டு வித்தியாசமான கதைக்களங்களை உருவாக்கியுள்ளனர்.

இவர்களைத் தவிர, பிட்சா - கார்த்திக் சுப்பாராஜ், காதலில் சொதப்புவது எப்படி - பாலாஜி மோகன், சூது கவ்வும் - நளன் குமாரசாமி போன்றோரும் உள்ளனர், ஆனாலும் அவர்கள் அனைவரும் என்னைப் பொறுத்தவரை குறும்படங்களிலேயே தமது திறமையை நிரூபித்து விட்டனர். என்றாலும் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இப்போது யாருடைய அடுத்த படம் வந்தாலும், அவர்களின் முதல் படம் நம் நினைவுக்கு வராமல், முழுதும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

Wednesday, April 24, 2013

உதிரிப்பூக்கள் - கதைக்குத் தேவையான கவர்ச்சி

நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா?

கதைக்குத் தேவையான கவர்ச்சினா, கவர்ச்சி காட்றதுல தப்பில்ல.

எந்த நடிகையை எடுத்துக் கொண்டாலும், இந்த கேள்வி உண்டு. இதே பதிலும் நிறைய பேரிடம் வந்ததும் உண்டு. இந்த கேள்வி எனக்கு எப்படி தோன்றும் என்றால், இதற்கு எனக்கு ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல உள்ளது. அட, அதில்லீங்க, "படத்துல, நீங்க நகைச்சுவை நடிகரோட கை கோத்துக்கிட்டு போற மாதிரி ஒரு காட்சி" என்று சொன்னால், அதில் நீங்கள் நடிப்பீர்களா? கண்டிப்பாக மாட்டீர்கள். நாயகனுடன் மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன் என்பீர்கள்.

கதைக்கு அது தேவைதான், ஆனால், நடிக்க மாட்டீர்கள். சமீபத்தில் 'பத்ம' விருதை ஒதுக்கிய ஜானகி அம்மாளை ரசித்தேன். ஆனாலும், அவரது கருத்தில் ஒன்றே ஒன்றுதான் இடித்தது. அதாவது, ஒரு படத்தில், இவர் பாட வேண்டிய பாடல் நகைச்சுவை நடிகைக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அதனால் அதை தான் பாடவில்லை என்றும் சொல்லியிருந்தார். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஜானகி அவர்கள், குரலை நன்றாக மாற்றிப் பாடக்கூடியவர். அவரால், அந்த நகைச்சுவை உணர்வைக் கொடுக்க முடியும் என்பதால்தான் அவர் அழைக்கப்பட்டிருப்பார்.என்னவோ போங்கள்.


உதிரிப்பூக்கள் என்ற (சீரியல் அல்ல) ஒரு பழைய படம் உள்ளது. நிறைய பேர், தமிழில் உள்ள உலகத் திரைப்படம் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், படம் பார்த்தால் "அப்படி எதுவும் தெரியவில்லையே, படம் ஒரு சாதாரண கதைதான், இதில் என்ன உள்ளது என்று ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள்" என்றுதான் எல்லோருக்கும் தோன்றும். இதே கேள்வியை நான் ஒரு பதிவிலும் பார்த்திருக்கிறேன்.

நம்மவர்களுக்கு, உலகப்படம் என்றாலே ஒரு முறை பார்த்தால் புரியக்கூடாது, திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் போவது போல இருக்கக்கூடாது என்று நிறைய நியதிகளை நாமே வகுத்து விட்டோம். அதனால்தான் இந்த படத்தில் அப்படி என்ன உள்ளது என்ற கேள்வி வருகிறது. இந்தப் படத்தை சிறு வயதிலேயே DDயில் பார்த்திருக்கிறேன். அப்போது இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை (கவனிக்க. புரியவில்லை என்று சொல்லவில்லை). ஏனென்றால் சண்டை இல்லை, கவுண்டமணி செந்தில் இல்லை.

இந்தப் படத்தில் ஏதோ உள்ளது என்று எப்போது தெரிந்தது என்றால், என் மாமா பொதுவாக படமே பார்க்க மாட்டார். அவரது மகன்களுக்காக ரஜினி படங்கள் மட்டுமே கூட்டிப் போவார். அவர் பார்த்து கண் கலங்கிய படம் 'உதிரிப்பூக்கள்'. இதை என் அத்தை என்னிடம் சொல்லியபோதுதான் முதன் முதலில் "இந்தப் படத்தில் என்னமோ உள்ளது போலவே?" என்று நினைத்தேன்.

இந்தப் படத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அலசி விட்டார்கள் நானும் என் பங்குக்கு, என்னுடைய புரிதல்களை பகிர்கிறேன்.



படத்தின் பாத்திரங்கள். படத்தில் கெட்டவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். விஜயனின் ஒரு சில குணங்களே, அவரைக் கெட்டவராக மாற்றும். தேவையில்லாமல் ஓவராக பேசும் குழந்தைகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் படத்தில் நாயகன் நாயகி என்று கூட சொல்ல முடியாது.

அதே போல படத்தின் வசனங்கள். விஜயனின் இரண்டாவது மனைவி, அவரின் குணம் தெரிந்து கிளம்பும்போது, விஜயன் தடுப்பார். அப்போது சொல்லுவார் "என்னை நாங்க இப்போதைக்கு தடுக்கலாம் ஆனா, நாளைக்கே நான் உங்களது சொத்துல விஷம் வைக்க முடியும்" என்பார். தேவையில்லாத அழுகையே இருக்காது. குறிப்பால் உணர்த்தும் காட்சிகள். கணவன் பூ, இனிப்பு எல்லாம் வாங்கி அனுப்பிவிட்டு, இரவு சினிமாவுக்கு போகலாம், சமைக்க வேணாம். வெளியே சாப்பிடப் போகிறோம் என்று சொல்லி அனுப்பியவுடன், அஷ்வினி மேலே பார்ப்பார் ("மழை வருதா என்ன" என்பது போல). ஒரு சாதாரண காட்சிதான். ஆனால், அது ஒரு அசாதாரண நிகழ்வு என்பதையும் உணர்த்தியிருப்பார். 

இந்தப் படத்தில், நாயகி குளிக்கப் போவது போல வரும். ஆனால், குளியல் காட்சி இல்லை. வறுமையால் நாயகி உடை கிழிந்திருக்கும் அனால் 'கிளிவேஜ்' இருக்காது. உடைகள் கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவாள். ஆனால், விரசம் இருக்காது.

படத்தில் பல முக்கியமான, கதைக்குத் தேவையான காட்சிகள் படத்தில் வராது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், இறுதிக் காட்சியில் விஜயன் தண்ணீரில் மூழ்கி இறக்கும் காட்சி, விஜயன் சரத்பாபுவை அடிப்பது போன்றவை.

படத்தின் இசை பற்றி தனியாக சொல்ல வேண்டுமா? இளையராஜா. 'அழகிய கண்ணே' பாடல் ஒன்று போதுமே. ஆனால், இங்கே உள்ளது படத்தின் ஆரம்பத்தில், இளையராஜாவின் குரலில் வரும் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.


உதிரிப்பூக்கள் - பார்க்கப்பட மட்டுமல்ல போற்றப்படவும் வேண்டியது.

டிஸ்கி: கூகிள் போய் 'உதிரிப்பூக்கள்' என்று தேடினால் சன் டிவியில் வரும் சீரியல்தான் வருகிறது. திரைப்படங்களின் பெயர்களை இது போன்று சீரியல்களுக்கு பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும்..

Monday, April 8, 2013

பல குறும்படங்களும், சில விளம்பரங்களும்!!!

இங்கே நான் பகிர்ந்துள்ள நிறைய குறும்படங்களை அறிமுகப்படுத்திய அண்ணன் சுரேஷ் குமார் அவர்களுக்கு நன்றி.. நன்றி.. நன்றி..

சும்மா, நான் மிகவும் ரசித்த, ரசித்துக் கொண்டிருக்கின்ற குறும்படங்கள் பற்றிய பார்வை, விளம்பர இடைவேளைகளோடு உள்ளது. நிகழ்ச்சிக்குப் போவோமா?

ஜக்கு பாய்ஸ்:

நான்கு வருடங்கள் இருக்கும். அப்போதுதான் குறும்படங்கள் வந்த புதிது. ஆன் சைட்டில் இருந்து நண்பன் ஒரு இணைப்பை அனுப்பி, "கண்டிப்பாக பார்" என்று சொல்லியிருந்தான். சரி பாக்காலாம், என்று நாங்களும் விட்டு விட்டோம்.

ஒரு பொழுது போகாத நாளில், நான் மட்டும், அதை பார்க்க ஆரம்பித்தேன். இரண்டு நிமிடங்களில் "என்ன எழவுடா இது" என்று தோன்றியது. அதன் பின், சும்மா பர பரவென் பட்டாசு கிளப்பியது. இத்தனைக்கும், அப்போது நான் ஆணி பிடுங்கும் வேலையில் இல்லை. தானியங்கித் துறையில் இருந்தேன். இருந்தாலும், எனக்கும், அந்த குறும்படத்தில் வரும் சம்பவங்கள் பொருந்தியது என்பது உண்மை. இந்தப் படத்தைப் பின் தரவிறக்கம் செய்து, கிட்டத்தட்ட விளம்பரமே செய்தோம். ஆணி பிடுங்கும் துறை உள்ளவரை, இந்தப் படமும் நிலைத்திருக்கும்.



ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் சந்திப்போம்.

ஒரு காலத்தில், எல்லா வங்கி மற்றும் காப்பீடு நிறுவன விளம்பரங்கள் அனைத்தும், குழந்தைகளை மையப்படுத்தி, மிகவும் ரசிக்கும் வகையில் வந்தன. அதில், எனக்கு மிகவும் பிடித்தது இந்த விளம்பரம்தான். அதுவும், அந்த குழந்தையின் பாவனைகள், அப்பப்பா...



சரி, மீண்டும் குறும்படங்களுக்குப் போகலாம். 

குறும்படங்கள் எல்லாம் நல்ல இருக்கும் போலவே என்று என்று தினமும் வீட்டிற்கு வந்து குறும்படங்கள் பார்க்க ஆரம்பித்தோம். நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டோம். அப்பா, ஆள விடுங்கடா சாமி என்றாகி விட்டது. அதன் பின், எப்போதாவது நாளைய இயக்குனர் மட்டும் பார்க்க ஆரம்பித்தோம்.

துரு: 

அப்போதுதான் ஒரு நாள் இந்தக் குறும்படத்தைப் பார்த்தோம். பார்த்தவுடனே, அதை மீண்டும் பார்க்க வேண்டுமே என்று தோன்றியது. ஏனென்றால், நீங்களும் பாருங்கள், உங்களுக்கும் தெரியும். அதன் பின், இதையும் வலையுலாவி, கண்டு பிடித்தோம்.




இந்த குறும்படத்தின் இயக்குனர் 'கார்த்திக் சுப்பராஜ்' இப்போது பிட்சா என்ற வெற்றிப் படத்தின் இயக்குனர். வாழ்த்துக்கள். அவரின் அடுத்த படிப்பிற்காக காத்திருக்கிறோம். 

ராமசாமி: 

திடீரென, யாரோ பகிர்ந்த ஒரு படம். மொக்கையாகத்தான் இருந்தது. ஆனாலும், கடைசியில் வரும் 'ராமசாமி' பாத்திரம், அதற்காகவே ரசித்து சிரிக்கலாம். அதுவரை சற்றே பொறுமையாக பார்க்க வேண்டுகிறேன்.



மீண்டும் ஒரு விளம்பர இடைவேளை.

சமீபத்தில் வந்த காப்பீட்டு விளம்பரம். ஹிந்தியில்தால் பாடல் எனக்கு ரசிக்கும்படி உள்ளது. ஆண்கள் பற்றிய, ஒரு மிக நல்ல விளம்பரம். 



மீண்டும் நிகழ்ச்சிக்கு போவோமா?

Pastense:

இந்தப் படத்தைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. சிறு குறிப்பு மட்டும்தான். இதை ஒரு அழுகாட்சிக் காவியமாகாக் கூட எடுத்திருக்கலாம், ஆனால், கடைசி வரை நகைச்சுவை இழையோடும். கவனியுங்கள்.



"இப்படியே போனா பந்து கடைதான் வைக்கணும்", "என்னது, தேங்கா பேசுது?", "டேய் ஊறுகா சப்பி" இவை முதலிரண்டு நிமிடங்களில் வரும் வசனங்கள்.. கவனித்தீர்களா?

இவை இரண்டும் குறும் படங்கள் அல்ல. ஆனால், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு முதன் முதலில் வந்த விளம்பரங்கள். அட்டகாசம். இப்போது பார்க்கும்போதுதான் ஏன் அந்த இரண்டாவது விளம்பரம் என்று தெரிகிறது. முதல் காணொளியில், கடைசியாக வரும் சிறுவனின் பாவனைகள்.. ப்பா!!







ஆனால் ஒரு சந்தேகம். இதில் வரும் யாருமே படத்தில் வரவில்லையே, ஏன்? என்னாச்சு?!!!

இதே போல இன்னும் நிறைய (ஓரளவு தேர்ந்தெடுக்கப்பட்ட) திரைப்படங்களை சுரேஷ் குமாரின் இந்த அடையாளத்திலும், இந்தப் பதிவிலும் காணலாம். சும்மா.. மக்களுக்கு நாலு நல்லப் படத்தைப் பத்தி சொல்லலாமுன்னு வந்தேன்.. அம்புட்டுதேன்.. (பதிவு கணக்குல ஒன்னு சேத்துக்கப்பு)

Friday, March 29, 2013

ச்சே, என்ன மாதிரி ஜென்மங்களோ!?

காலை நேரம். தூக்கக் கலக்கம்.

"ஏ, பாப்பா கத்திக்கிட்டே இருக்கு பாரு, என்ன பண்ணிக்கிட்டிருக்க?"

"எனக்கு மட்டும் என்ன ஏழு கையா இருக்கு, நீங்கதான் கொஞ்சம் என்னன்னு பாக்குறது" 

முனகிக்கொண்டே எழுந்து, "ஏ, கன்னுக்குட்டி, செல்லம், என்னாச்சு, ஏன் அழுவுற" என்று குழந்தையைத் தூக்கி, ஏமாத்தி, பொம்மையைக் கொடுத்து சமாதானப்படுத்தினேன்.

"ஏய். காபியும், அந்த பேப்பரையும் கொண்டா" என்று கத்தி முடிக்கும் முன்பு இரண்டும் என் முன்னால் இருந்தது. "ச்சே ச்சே, எப்ப பாரு அங்க கற்பழிப்பு, இங்க பலாத்காரம், சினிமாவுல மதுரை அரிவாள் கலாசாரம் மாதிரி, இப்ப கற்பழிப்பு கலாச்சாரம் போலிருக்கு" என்றபடி, போய்க் குளித்து விட்டு வரும்போது, இட்லி தயாராக இருந்தது.

"ஏங்க, சாயந்திரம் வரும்போது நான் சொன்னத வாங்கிட்டு வாங்களேன்" என்றாள் மனைவி. "அதெல்லாம் போய் என்னால வாங்க முடியாது. பாப்பாவ தூங்க வச்சிட்டு நீயே போயி வாங்கிக்க. நான் வேற இன்னக்கி ஆபிஸ் வேலையா திருவள்ளூர் போகணும். ராத்திரி வர லேட்டாகும்" என்று கத்தி விட்டு கிளம்பினேன்.

பேருந்து நிறுத்தம் சென்று, தாம்பரம் பேருந்து ஏறினேன். "அப்பப்பா என்ன கும்பல்" என்று எண்ணியவாறே, ஒரு ஓரமாக நின்று கொண்டேன். இன்னும் அரை மணி நேரம் போகணுமே என்று எண்ணிக்கொண்டே, சும்மா உள்ளே நோட்டமிட்டேன்.



"அடப்பாவி, அந்தப் பொண்ண ஒரு பொறுக்கி எப்படி ஒரசிக்கிட்டிருக்கான், எவனாவது ஏதாவது கேக்குறானா பாரேன்" என்றபடி எல்லாரையும் பார்த்தேன். எல்லோரும் அங்கெ பார்த்து விட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டனர். "ச்சே, என்ன மனுஷங்களோ" என்றபடி மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். "இந்தப் பொண்ணாவது ஏதாவது சொல்லாம், யாருக்குத் தெரியும், அதுக்கும் ஆசையோ என்னவோ, ச்சே ச்சே" என்றபடி தாம்பரம் வந்து இறங்கினேன். அந்தப் பெண் கண்ணில் ஏதோ தூசி போல, தலையைக் குனிந்து கொண்டு, கண்களைத் தடவிக் கொண்டு போனது.

பின் ஓடிப்போய், திருவள்ளூர் செல்லும் பேருந்தைப் பார்த்தேன். முதல் பேருந்தில் உட்கார இடம் இல்லை. இன்னும் நேரம் இருந்ததால் அடுத்த பேருந்தில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சம் இந்தப் பேருந்தும் கும்பல் ஆனது.



பேருந்து கிளம்பும் நேரத்தில் ஒரு கணவன் மனைவி ஏறினர். அந்தப் பெண்ணுக்கு சற்றே மேடிட்ட வயிறு. ஏறியவுடன், அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தனர். இடம் எங்குமில்லை. யாரும் எழுவது போல தெரியவில்லை. நான் எழ நினைத்தேன். பிறகு யோசித்து இன்னும் இரண்டு மணி நேரம் நிற்க வேண்டுமா, திரும்பி வரும்போது என்றால் பரவாயில்லை என்று யோசித்து, கண்களை மூடிக்கொண்டேன்.

மாலை வேலையெல்லாம் முடிந்து மீண்டும் தாம்பரம் வந்தேன். ஐந்தாறு வயதுள்ள சிறுவன் சிறுமி இருவரும் "சார் சார்" என்று பின்னாடியே வந்தார்கள். "போங்க போங்க, சில்லறை இல்லை, சும்மா நைனைன்னு பின்னாடி வராதீங்க" என்று விரட்டினேன்.

வீட்டுக்கு நடந்து போகும் வழியில், குழந்தைக்கு பொம்மைகள் வாங்கினேன். மனைவி கேட்டது நினைவுக்கு வந்தது. சரி, எப்படியும் வாங்கியிருப்பாள் என்று என்ன்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

டிவி ஓடிக்கொண்டிருந்தது. குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. "என்னடி, நீ கேட்டத வாங்கிட்டியா" என்றேன். எதுவும் பதில் இல்லை. "இதப் பாரு, அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம், நான் போயி எப்படிக் கேக்க முடியும்?" என்றபடி உடை மாற்றிக்கொண்டு வந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது. ரிமோட்டை எடுத்து வேறு மாற்றினேன். "அமில வீச்சால் இன்னொரு பெண் பலி" என்று செய்தி ஓடியது. "என்ன கொடுமையடா" என்று நினைத்துக்கொண்டே மீண்டும் மாற்றினேன். அந்நியன் படம் ஆரம்பித்திருந்தது. பின் சாப்பிட்டேன்.

மனைவியிடம் இன்று பேருந்தில் நடந்ததையெல்லாம் சொன்னேன். "எல்லோரும் வேடிக்கை பாத்துக்கிட்டே இருக்காங்க, என்ன மனுஷங்களோ" என்றேன். டிவியில் "யாராவது சோடா வங்கி வாங்களேன்" என்று ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். மனைவி பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு வந்தாள்.

"தூங்கலியா?" என்று கேட்டாள். "இல்ல ஒரு பதிவு எழுதலாம்னு இருக்கேன். நான் முடிச்சிட்டு தூங்கறேன்" என்றேன். "எதப்பத்தி?" என்றாள்.

"பாரேன், இந்த அமில கலாச்சாரம், கற்பழிப்பு. நாடு எவ்வளவு எவ்வளவு மோசமா இருக்கு. பெண்களுக்குன்னு பாதுகாப்பே இல்ல. இதப் பத்தி ஒரு பதிவு போட்டே ஆகணும் கண்டிப்பா. மாணவர்கள் எல்லாம் இலங்கைப் பிரச்சினைக்கு போராட்டம் பண்றாங்க. நம்மால முடிஞ்சத, ஒரு பதிவாவது போடனுமுல்ல" என்றேன்.

என் மனைவி என்னைப் பார்த்து சிரிப்பது போல தோன்றியது.

டிஸ்கி 1: உங்களில் யார் யோக்கியமானவனோ அவன் முதலில் கல்லை எரியட்டும். - இயேசு

டிஸ்கி 2: மத்தவங்க மனசு புண்படும்படி ஒரு வார்த்தை சொன்னாலும், மனசுல நினைத்தால் கூட அது குற்றம்தான் - ஈரம்.

Saturday, March 16, 2013

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

பதிவு போட ஒன்னும் இல்லேல்ல.. அதான் பிட்டு.. 

சமீபத்தில் பார்த்த பிற மொழி திரைப்படங்கள் பற்றிய கருத்துக்கள். 

தலாஷ் (Talaash): உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சத்தியமாக இந்தப் படம் எனக்குப் புரியவேயில்லை. இது நிஜமாகவே பேய்ப் படமா, இல்லை எனக்கு புரியவில்லையா? ஆனாலும் படத்தில் எனக்கு சில காட்சிகள் மிகவும் பிடித்தன. குறிப்பாக, தன மகனின் இறப்பை நினைத்து கலங்கும் அமீர், ஒரு வேளை தன்னுடனே விளையாட வைத்திருக்கலாமோ, தானும் கூட போயிருக்கலாமோ என்று நினைக்கும் காட்சிகள். நாம் அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அதே போல இறந்தவர்களைப் பற்றி எண்ணியிருப்போம். மற்றபடி நல்ல சப் டைடிலுடன் பார்த்தால் ஒரு வேளை புரியுமோ என்னவோ?


Special 26: படத்தில் சண்டை இல்லை. பறக்கும் டாட்டா சுமோக்கள் இல்லை. ஆனாலும் படம் பரபரவென்று பறக்கிறது. நடுநடுவே காதல் காட்சிகளும், பாடல்கள் மட்டும் வேகத்தடை. A Wednesday படத்தில் பாடல்களோ, காதலோ இல்லாமல் எடுத்த நீங்கள், இந்தப் படத்தில் ஏன் வைத்தீர்களோ? மற்றபடி படத்தில் வரும் டிவிஸ்ட் எல்லாமே, நிஜமாகவே ஊசிகொண்டை வளைவுகள்தான். ஆனால், அவை அனைத்துமே படத்தில் முன்பே சொல்லப்பட்டுவிட்டன. நிறைய இடங்களில் சப் டைட்டில் இல்லாவிட்டாலும், படம் நன்கு புரிந்தது.



ஹரிதாஸ் மற்றும் பரதேசி பட விமர்சனங்கள் படிக்கும்போது பார்க்க வேண்டுமென்ற ஆவல் உள்ளது. பார்ப்போம்.


யாராவது இளையராஜாவிடம் போய் குமுதத்தில் வரும் அவரது கேள்வி பதில்களை நிறுத்தச் சொல்லி சொல்லுங்களேன். நிறைய பேரிடம் அவர் இருக்கும் மரியாதையையும் இழந்து விடுவார் போல் உள்ளது. பொதுவாக ராஜா ரஹ்மான் பிரச்சினை வரும்போதெல்லாம், ராஜாவின் தலைக்கனம் பற்றி பேச்சு வரும். கமல் ரஜினி சண்டையிலும் அதே போல கமலின் பழக்க வழக்கங்கள் பற்றி வரும். அப்போது நான் சொல்வது "நமக்குத் தேவை ராஜாவின் பொருள்தான், அதாவது இசை மட்டும்தான். அதே போல கமலின் படங்கள் பற்றி மட்டும் நாம் பேசுவோம்" என்பேன் வேறு எப்படி சமாளிக்க. இருந்தாலும்,

ராஜா ரொம்பவும் அதிகமாக பேசுவது உண்மைதான். பாரதிராஜா அவரைப் பற்றி குறை சொன்னால், இவர் அதை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். அவரைத் திட்டுவது ஊடகங்களில் வந்து விட்டது என்று இவரும் ஊடகம் வழியாகத்தானே கண்டனங்களைத் தெரிவிக்கிறார்? இசையமைப்பாளர் வாய்ப்பே எதிர்பாராமல் வந்தது என்றால் என்ன என்று எனக்கும் புரியவில்லை. இவர் வாய்ப்பே கேட்கவில்லை என்கிறாரா? ஒருவர் SPB உங்களைப் பற்றி நிறைய புகழ்கிறாரே, நீங்கள் ஏன் அவரைப் பற்றி அவ்வளவாக மேடைகளில் பேசுவது இல்லை என்றதற்கு, அவர் என் மீது வைத்துள்ள மதிப்பு அப்படி, நான் வைத்துள்ளது இப்படி என்கிறார்.

MSV அன்னக்கிளி இசையைக் கேட்டபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்ற கேள்விக்கு (உண்மையாகவோ, பொய்யாகவோ) பதிலளித்துள்ளார். ஆனால், ராஜாவிடம் ரோஜா படத்தின் இசைக் கேட்டபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டால் என்ன சொல்வார்? நான் அந்தக் குப்பைகளை கேட்பதில்லை என்பார். (நீ இந்தக் கேள்வியை குமுதத்திற்கு அனுப்பினாயா நாயே என்றால், இல்லை. அனுப்பினால் பிரசுரம் ஆகாது, ஆனாலும் இதுதான் பதிலாக இருக்கும்). ஒருவேளை இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால், கண்டிப்பாக யுவன் மற்றும் கார்த்திக்கைத்தான் சொல்லுவார். ஏனென்றால் ஏற்கனவே எங்கோ படித்துள்ளேன். அதில் சமீபத்தில் ரசித்த வேறு இசையமைப்பாளரின் பாடல் என்ற கேள்விக்கு, கார்த்திக் ராஜாவின் ஹிந்திப் பட பாடலைதான் சொன்னார். "ஏண்டா பக்கி, உனக்குத் தேவை ராஜாவின் இசை மட்டும்தானே, பின்ன எதுக்கு இந்த கதை" என்ற பின்னூட்டங்கள் வேண்டாம். ஏதோ சொல்லத் தோன்றியது. ஏனென்றால் எனக்கு ராஜாவைப் பிடிக்கும்.

என்னுடைய மிகப் பழைய பதிவின் சாராம்சம், ராஜா ஒரு கண்டிப்பான கணக்கு வாத்தியார். அவரிடம் யாராவது "இந்த கணக்குக்கு இந்த மாதிரியும் வழிமுறை வச்சி போடலாமா?" என்று கேட்டால், "நான் சொல்லிக் கொடுத்த மாதிரி மட்டும் பண்ணு" எனலாம். ஆனால், ரஹ்மானோ, நட்பு பாராட்டும் நண்பன், எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்.

என்னதான் சொல்லுங்க, இந்த பஞ்சாயத்து ஓயாது. கடைசியாக ஒரு பெரிய சந்தேகம். முகவரி படத்தில் வரும் VMC ஹனீபாவின் பாத்திரம் இளையராஜாவா? படம் வந்தபோது யாரும் எதிர்க்கவில்லையா? பார்க்கலாம். இசை படத்திற்காக காத்திருக்கிறேன்.